டீ-காபி பிரியர்களுக்கு பேரதிர்ச்சி… நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு விலை உயர்வு!
Tea And Coffee Prices Rise: ஈரான்-இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் டீ மற்றும் காபிக்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், டீ பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. அதில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கான சைடு டிஸ்களும் குறைக்கப்பட்டன. மேலும், பல்வேறு ஹோட்டல்களில் கலவை சாதங்கள் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், பிரபலமான உணவகங்கள் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இழுத்து மூடப்பட்டுள்ளன. இப்படியாக கொரோனா ஊரடங்கு காலத்தை போல தற்போது மாறி உள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு போல, வீட்டு உபயோக சிலிண்டரின் கட்டுப்பாடும் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
விறகு அடுப்புகளுக்கு மாறிய ஹோட்டல்கள்
இதற்காக பெரும்பாலான உணவகங்கள் விறகு அடுப்புகளுக்கு மாறி விட்டன. இதனால், விறகு விலையும் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் டீ கடைகளில் பஜ்ஜி, போண்டா, வடை உள்ளிட்ட தின்பண்டங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, எதிர்பாராத விதமாக, டி மற்றும் காபிகளின் விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளது. பொதுவாக சாலையோர டீ கடைகளில் ஒரு கப் டீ ரூ.10 அல்லது ரூ.12- க்கு விற்பனை செய்யப்படும்.
மேலும் படிக்க: கேஸ் தட்டுப்பாடு – சென்னையில் கடைகளில் டீ விற்பனை நிறுத்தம்…. வடைகளின் விலை உயர்வு




டீ- காபி விலை கடுமையாக உயர்வு
தற்போது, உணவகங்கள், டீ கடைகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர்களின் தட்டுப்பாடு காரணமாகவும், அதற்கான விலை ஏற்றம் காரணமாகவும் டீ விற்பனை விலை ரூ.20- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல, காபியின் விலையும் ரூ.20- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, டீ கடையின் உரிமையாளர்கள் கூறுகையில், தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வணிக சிலிண்டர்கள் விற்பனை முற்றிலுமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், டீ மற்றும் தின்பண்டங்களின் விற்பனை முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. இருந்தாலும், அன்றாட வாழ்வை நடத்துவதற்கு வருமானம் தேவை என்பதால் தனி நபர்களிடம் இருந்து சிலிண்டர்கள் வாங்கும் நிலை உள்ளது.
கள்ளச்சந்தையில் ரூ.5000-க்கு சிலிண்டர் விற்பனை
அப்படி வாங்கப்படும் சிலிண்டர் ரூ.5000 வரை விற்பனை செய்து வருகின்றனர். தற்போது நிலவி வரும் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே, டீ மற்றும் காபி ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்கள் விலை உயர்ந்தது தவிர்க்க முடியாது என்றாலும், கள்ளச் சந்தையில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு… 2 மடங்கு உயர்ந்த விறகு விலை – தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு