நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில் நிறைய மாறியுள்ளது.. லிஸ்ட் போட்டு சொன்ன அண்ணாமலை..
Annamalai on DMK: மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “ திமுக ஆட்சியில் முதல்வர் பேண்ட் போடுவது, உதயநிதி நாயோடு போட்டோ போடுவது என மாறி உள்ளது. 2026 ல் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கட்டிலில் அமர வைக்க மோடி முடிவெடுத்து அமித்ஷா அறிவித்து விட்டார்கள்” என பேசியுள்ளார்.

மதுரை, அக்டோபர் 13, 2025: வரவிருக்கும் 2026-இல் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க பிரதமர் மோடி முடிவு செய்து, அமித்ஷா அறிவித்து விட்டார் என மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை என தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருமே தங்களது பிரச்சாரப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய அதிமுக அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் சென்று மக்களை சந்தித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இச்சுற்றுப்பயணத்தின் போது திமுக அரசையும் கூட்டணி கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்து பேச்சுக்கள் முன்வைத்து வருகிறார்.
நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்:
இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை அக்டோபர் 12, 2025 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளார். தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை மதுரை மாவட்டத்தில் இருந்து தொடங்கினார். இதற்கான தொடக்க நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது.
மேலும் படிக்க: திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட முகூர்த்த நாள் குறிக்கப்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன் பேச்சு..
இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த 4 மாதங்களுக்கு கடுமையாக உழைக்க வேண்டும்:
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பாஜக – அதிமுக கூட்டணி கணக்கு வெற்றியடையும். புயல், மழை, பனி எதுவாக இருந்தாலும் அடுத்த நான்கு மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் இறுமாப்புடன் உள்ளார். காசு கொடுத்து தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைத்து இருக்கிறார். தமிழகத்தில் நான்கரை ஆண்டுகளில் பல்வேறு விஷயங்கள் மாறிவிட்டன” என தெரிவித்தார்.
மேலும் படிக்க: வருமானம் குறையுது.. அமைச்சர் பதவி வேண்டாம்.. சுரேஷ்கோபி முடிவு!
திமுக ஆட்சியில் தமிழகம் கண்ட மாற்றம்:
“எப்படி என்றால், வேட்டி கட்டும் முதலமைச்சர் இப்போது பேன்ட் போடுகிறார். புட்பால் விளையாட வெளிநாடு சென்ற முதலமைச்சரின் பேரன், நடிகராக வர உள்ளார். ஒரு நிறுவனத்தின் சிஇஓவாக மாறிவிட்டார். உதயநிதி ஸ்டாலின் தினமும் நாயோடு தான் புகைப்படம் பதிவிடுகிறார். அந்த நாய்க்கு நான்கரை ஆண்டுகளுக்கு முன் மீசை கருப்பாக இருந்தது, இப்போது வெள்ளையாக மாறிவிட்டது. இந்த ஆட்சியில் நடந்த மாற்றங்கள் இதுதான்” என தெரிவித்தார்.
மேலும் அவர், “2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க மோடி முடிவு செய்து, அமித்ஷா அறிவித்து விட்டார்கள். சினிமாவை பார்க்கப் போகிறார்கள், விசில் அடித்து ரசிக்க வேண்டும். சினிமாவில் நடிப்பவர்கள் தமிழகத்தை நன்றாக ஆளுவார்கள் என நினைக்க முடியாது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வம்பு சண்டை போடுவதற்காக டெல்லிக்கு சென்று வருகிறார். ஆய்வுக் கூட்டம் நடத்த தெரியாத பொம்மை முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார். அதிமுக – பாஜக கூட்டணிக்கு சட்டமன்றத் தேர்தல் கடைசி வாய்ப்பாக அமைந்துள்ளது” என தெரிவித்தார்.