யார் இந்த அண்ணாமலை? காக்கிச் சீருடை முதல் அரசியல் அதிரடி வரை.. முழு அரசியல் பயணப் பார்வை!!
2023-இல் ராமேஸ்வரத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் இவர் நடத்திய 'என் மண் என் மக்கள்' நடைபயணம் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவின் குட்புக்கில் இவரை இடம்பெறச் செய்தது. கூட்டணி கட்சியான அதிமுக-வை அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வந்ததால், 2023 செப்டம்பரில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது.
சென்னை, ஜுன் 05: பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி, தமிழக அரசியல் களத்தின் கவன ஈர்ப்பு மையமாக மாறியுள்ளார் அண்ணாமலை. அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வதாக பாஜக தலைமையும் அறிவித்துள்ளது. தொடர்ந்து, அண்ணாமலை புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்றைய தினம் அவர் சமூக வலைதளம் மூலம் மக்களை சந்தித்து தனது கருத்துகளை பகிர உள்ளதாகவும், மனம் திறந்து உரையாட உள்ளதாகவும் அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். மிகவும் குறுகிய காலத்தில் தமிழக பாஜக-வின் பிரதான முகமாகவும், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாகவும் உருவெடுத்த அண்ணாமலையின் கடந்து வந்த பாதை சுவாரசியங்கள் நிறைந்தது. அவரது அரசியல் பயணம் குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
இதையும் படிக்க: அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்றது பாஜக.. தலைமை சொன்னது என்ன?
விவசாயக் குடும்பம் டூ ஐபிஎஸ் அதிகாரி:
அண்ணாமலை கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி என்ற கிராமத்தில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 2007-ஆம் ஆண்டு கோவையில் தனது பொறியியல் படிப்பை முடித்த அவர், பின்னர் நாட்டின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஐஐஎம் லக்னோவில் MBA பட்டம் பெற்றார். தொடர்ந்து, 2011-இல் யுபிஎஸ்சிதேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் அதிகாரியானார். 2013-இல் கர்நாடக மாநிலம் கார்கலாவில் ஏஎஸ்பி-யாக (ASP) தனது காவல் பணியைத் தொடங்கினார்.
கர்நாடகாவின் சிங்கம்:
கர்நாடகாவில் பணியாற்றிய போது போதைப்பொருள் விற்பனையைத் தடுத்தல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், இரவு நேர நேரடி ரோந்துப் பணிகள் மற்றும் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது போன்றவற்றால் மக்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்றார். பெங்களூரு தெற்கு மாவட்டத் துணை ஆணையராக உச்சம் தொட்ட அண்ணாமலை, கர்நாடக மக்களால் அன்போடு ‘கர்நாடகாவின் சிங்கம்’ என்று அழைக்கப்பட்டார்.
வாழ்க்கையை மாற்றிய இமயமலைப் பயணம்
நேர்மையான அதிகாரியாகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, 2019-இல் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்து மக்களுக்கு அதிர்ச்சியளித்தார். இந்த முடிவுக்குப் பின்னால் அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட இரு முக்கிய சம்பவங்கள் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். அதில் முதலாவது, 2018-இல் இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவருக்குச் சென்ற பயணம், தன் வாழ்க்கையின் உண்மையான முன்னுரிமை எது என்பதைத் தெளிவாகப் பார்க்க உதவியதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.
அடுத்ததாக, கர்நாடக காவல் துறையின் ஹீரோவாகவும் நேர்மையான அதிகாரியாகவும் விளங்கிய ஐபிஎஸ் அதிகாரி மதுகர் ஷெட்டியின் திடீர் மரணம், அண்ணாமலையைத் தனது சொந்த வாழ்க்கைப்பாதையை மறுபரிசீலனை செய்ய வைத்தது. மக்களுக்குச் சேவை செய்ய போலீஸ் துறையை விடச் சிறந்த வழிகள் (அரசியல்) இருப்பதாகக் கூறி காக்கிச் சீருடைக்கு விடை கொடுத்தார்.
விவசாயம், பாஜக-வில் இணைவு:
பதவி விலகலுக்குப் பின் சொந்த கிராமத்தில் விவசாயம் செய்யத் தொடங்கியவர், “We The Leaders” என்ற அமைப்பைத் தொடங்கிச் செயல்பட்டார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருந்த நேரத்தில், அண்ணாமலை அதில் இணைவார் என்று பேசப்பட்டது. ஆனால், ரஜினி கட்சி தொடங்காததால், 2020 ஆகஸ்ட் 25 அன்று டெல்லியில் பா.ஜ.க-வில் இணைந்தார் அண்ணாமலை.
ஓராண்டிற்குள் மாநிலத் தலைவர் பதவி:
கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே மாநிலத் துணைத்தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த போதிலும், கட்சியில் சேர்ந்த ஓராண்டிற்குள்ளேயே, அதாவது 2021 ஜூலை 8 அன்று தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து, ஆட்சியில் இருந்த திமுக-வுக்கு எதிராகப் பல்வேறு ஊழல் புகார்கள், ஆவணங்களை வெளியிட்டு ஆக்ரோஷமான அரசியலை முன்னெடுத்தார். அதிமுக உட்கட்சிப் பூசலில் இருந்த சமயத்தில், பா.ஜ.க-வை முதன்மை எதிர்க்கட்சியாகக் காட்ட தீவிரமாக உழைத்தார்.
என் மண் என் மக்கள் யாத்திரை:
2023-இல் ராமேஸ்வரத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் இவர் நடத்திய ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவின் குட்புக்கில் இவரை இடம்பெறச் செய்தது. கூட்டணி கட்சியான அதிமுக-வை அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வந்ததால், 2023 செப்டம்பரில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக இல்லாமல் பா.ஜ.க தலைமையில் தனி கூட்டணியை அமைத்து அண்ணாமலை களம் கண்டார்.
வார் ரூம் சர்ச்சைகள்:
அண்ணாமலை அமைத்த பாஜக ‘வார் ரூம்’ செயல்பாடுகள் மற்றும் பிற நிர்வாகிகளிடம் அவர் அதிகாரம் செலுத்துவதாக டெல்லி தலைமைக்குப் புகார்கள் சென்றன. 2024 தேர்தல் தோல்விக்குப் பிறகு அண்ணாமலை நடத்திய சில போராட்டங்கள் பெரும் விவாதப் பொருளாயின. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டுத் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்தினார். திமுக-வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று சபதமேற்று, பின்னர் அதிலிருந்து பின்வாங்கினார்.
தலைவர் பதவி மாற்றம்:
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய வேளையில், அதிமுக-வுடன் மீண்டும் கூட்டணி வைக்க டெல்லி தலைமை விரும்பியதற்கு அண்ணாமலையின் துடுக்கான பேச்சு தடையாக இருப்பதாகக் கருதப்பட்டது. இதனால், 2025 ஏப்ரல் 12 அன்று அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் தலைவராக்கப்பட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 27 இடங்களில் போட்டியிட்ட போதும் அண்ணாமலை போட்டியிடவில்லை.
இதையும் படிக்க: “13ம் ஜோக்கராக இருந்தால் என்ன செய்ய முடியும்?”.. தவெக அரசை சாடிய உதயநிதி ஸ்டாலின்!
பாஜகவில் இருந்து விலகல்:
தேர்தல் தோல்வி மற்றும் கட்சிக்குள் நிலவிய தொடர் மோதல்கள் காரணமாக, அண்ணாமலை டெல்லி சென்று தேசியத் தலைவர் நிதின் நபினிடம் பரபரப்புக் கடிதம் அளித்து, தற்போது பா.ஜ.க-விலிருந்து விலகியுள்ளார். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ஐபிஎஸ் அதிகாரியாக மாறி, பின்னர் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய அண்ணாமலையின் அடுத்தகட்ட நகர்வு (தனிக்கட்சித் தொடங்குவது) என்னவாக இருக்கப் போகிறது என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.