“திமுகவுடன் நட்பு தொடர்கிறது.. ஆனால்”.. பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!!
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது குறித்துப் பேசிய அவர், தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில், கூட்டணி தொடர்பான எந்தவொரு இறுதி முடிவும் ஏற்படவில்லை" என்று கூறினார். மேலும், தவெக தலைமையில் இன்னும் முறையான கூட்டணி எதுவும் அதிகாரப்பூர்வமாக அமையவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சென்னை, ஜூலை 07: “திமுகவுடன் எங்கள் நட்பு தொடர்ந்து நீடிக்கிறது” என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே சமீபகாலமாக சில சலசலப்புகள் நிலவி வரும் சூழலில், திருமாவளவன் எம்பி, தங்களது கூட்டணி நிலைப்பாடு மற்றும் அதிருப்திக்கான காரணங்கள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஓப்பனாகப் பேசியுள்ளார்.
மேலும் படிக்க: ஆடு திருடிய வழக்கறிஞருக்கு அரசுப் பதவி வழங்கியது நியாயமா முதல்வரே? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!
திமுக கூட்டணியில் தொடரும் விசிக:
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக – விசிக கூட்டணி உடைந்துவிட்டதா அல்லது விரிசல் விழுந்துள்ளதா என்ற அரசியல் வட்டாரத்தின் தொடர் கேள்விகளுக்குப் பதிலளித்ததார். அதன்படி, தற்போதைக்கு கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். “நாங்கள் திமுக அரசுக்குத் தேர்தல் ரீதியாக ஆதரவு அளித்தோம் என்கிற அடிப்படையில், தற்போதும் திமுக கூட்டணியில் தான் தொடர்ந்து நீடித்து வருகிறோம். திமுகவுடன் எங்கள் நட்பு தொடர்ந்து நீடிக்கிறது” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
திமுக மீது வெளிப்படையான அதிருப்தி:
கூட்டணி தர்மம் ஒருபுறம் இருந்தாலும், அண்மையில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வு குறித்து தனது கடுமையான அதிருப்தியை திருமாவளவன் பதிவு செய்துள்ளார். அதாவது, “நாங்கள் கூட்டணியில் நீடிக்கும் அதே வேளையில், எங்கள் கட்சியிலிருந்து அதிருப்தி அடைந்த ஒரு முன்னணி பொறுப்பாளரை திமுக தங்களில் இணைத்துக் கொண்டது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. அந்த அரசியல் அதிர்ச்சியைத் தான் நான் வெளிப்படுத்தினேன், அவ்வளவுதான்” என்று தங்களுக்குள் இருக்கும் மனஸ்தாபத்தை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.
தவெக தலைமையில் இன்னும் கூட்டணி இல்லை:
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது குறித்துப் பேசிய அவர், தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில், கூட்டணி தொடர்பான எந்தவொரு இறுதி முடிவும் ஏற்படவில்லை” என்று கூறினார். மேலும், தவெக தலைமையில் இன்னும் முறையான கூட்டணி எதுவும் அதிகாரப்பூர்வமாக அமையவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை பங்கும், தனித்துவமான நிலைப்பாடும்:
ஆட்சியில் அதிகாரப் பகிர்வு மற்றும் தவெக அரசுடனான உறவு குறித்து திருமாவளவன் மிக முக்கிய அரசியல் விளக்கங்களை முன்வைத்தார். “நாங்கள் தவெக அரசை வெளியில் இருந்து ஆதரித்த காலகட்டத்திலும் கூட, திமுக கூட்டணியில் தான் தொடர்ந்து நீடித்தோம்” என்று தங்களது அரசியல் நிலைத்தன்மையை விளக்கினார். அதேபோல, “தற்போது தவெக அமைச்சரவையில் (ஆட்சியில்) நாங்கள் இணைந்து செயல்பட்டாலும் கூட, தவெக-வின் அரசியல் கூட்டணியில் நாங்கள் இணையவில்லை” என்று மிகத் தெளிவானதொரு அரசியல் எல்லையை வகுத்துக் காட்டியுள்ளார்.
மேலும் படிக்க: கோவையில் காதலி விவகாரத்தில் புகைப்பட கலைஞர் கொலை.. உடலை தண்டவாளத்தில் வீசிய கொடூரம்.. இருவர் அதிரடி கைது!
“ஆணவப் படுகொலை” ஓயாத விசிக-வின் முழக்கம்:
“ஆணவப்படுகொலைக்க எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் தற்போதைய தவெக ஆட்சியில் மட்டுமல்ல, இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்திலும் வலியுறுத்தினோம்; இந்த ஆட்சியிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், எதிர்காலத்திலும் வலியுறுத்துவோம். இதற்கொரு முறையான, நல்ல முடிவு எட்டும் வரையில் எங்களுடைய இந்த கொள்கை ரீதியான கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டேதான் இருப்போம்” என்று கூறினார்.