AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குதிரை பேர வழக்கு.. ஆஜராகாத செந்தில் பாலாஜி.. போலீஸ் எடுத்த அடுத்தக்கட்ட அதிரடி முடிவு!!

இந்தக் குதிரை பேர சதித் திட்டம் வெளிச்சத்திற்கு வந்ததற்கு இளையராஜா என்பவர் கொடுத்த புகாரே முக்கியக் காரணமாகும். தற்போது கைதாகியுள்ள திருநாவுக்கரசு என்பவர்தான் முதன்முதலில் இளையராஜா என்பவரைத் தொடர்புகொண்டு, தவெக எம்.எல்.ஏ.க்களைப் பேரம் பேசி இழுப்பது குறித்துப் பேசியுள்ளார். இதையறிந்த இளையராஜா உடனடியாக போலீசில் புகார் அளிக்க, அதன் பேரிலேயே இந்த மிகப்பெரிய கைது நடவடிக்கைகளும், அடுத்தடுத்த போலீஸ் பாய்ச்சல்களும் அரங்கேறியுள்ளன.

குதிரை பேர வழக்கு.. ஆஜராகாத செந்தில் பாலாஜி.. போலீஸ் எடுத்த அடுத்தக்கட்ட அதிரடி முடிவு!!
செந்தில் பாலாஜி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 07 Jul 2026 10:20 AM IST

சென்னை, ஜூலை 07: தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரம் பேசப்பட்டதாக எழுந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் சென்னை திருவல்லிக்கேணி போலீசார், இந்த சதியின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களைக் கண்டறியும் நோக்கில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தவெக எம்.எல்.ஏ.க்களைக் குறிவைத்து பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை ஒன்பது நபர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பல அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க: தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேர வழக்கு.. அடுத்ததடுத்து கைதாகும் நபர்கள்.. திருவல்லிக்கேணி போலீசார் அதிரடி!

நட்சத்திர ஹோட்டலில் தீட்டப்பட்ட சதி திட்டம்:

சென்னை சிஐடி நகர் பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்த கும்பல் ரகசியமாகத் தங்கி, எம்.எல்.ஏ.க்களை வளைப்பதற்கான சதி திட்டத்தைத் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது. கட்சியின் மக்கள் பிரதிநிதிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதற்காக, ஒரு எம்எல்ஏ-வுக்கு குறைந்தபட்சம் 35 கோடி ரூபாய் முதல் அதிகபட்சமாக 50 கோடி ரூபாய் வரை பேரம் பேச இவர்கள் திட்டமிட்டு, அதற்கான பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளனர்.

சிக்கிய முக்கியப் புள்ளிகள்:

இந்த வழக்கின் பின்னணியில் மிக முக்கிய நபர்களாகக் கருதப்படுபவர்கள் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆவர். இவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக நேற்று நேரில் ஆஜராகுமாறு திருவல்லிக்கேணி காவல்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாகச் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும், அவர்கள் இருவரும் நேற்று விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்துள்ளனர். ஏற்கனவே இவர்களுக்கு எதிராக ‘லுக்அவுட் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டு அது நிலுவையில் இருந்து வரும் சூழலில், விசாரணைக்கு வராமல் நழுவிய இவர்களுக்கு மீண்டும் ஒருமுறை சம்மன் அனுப்பி நேரில் வரவழைப்பதற்கான சட்டப்பூர்வ முயற்சிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

6 பேரை போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் மனு:

இவ்வழக்கில் கைதாகி தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சீனிவாசன், ராஜேஷ், ரமேஷ், கார்த்திக் மற்றும் செல்வம் ஆகிய ஆறு நபர்களிடம் மேலும் விரிவான விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என போலீசார் கருதுகின்றனர். இதனால், இந்த ஆறு பேரையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருவல்லிக்கேணி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இவர்களை 5 நாட்கள் தங்களது காவலில் ஒப்படைக்கக் கோரி நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வரவுள்ளது. காவல்துறை தரப்பில் 5 நாட்கள் கேட்கப்பட்டிருந்தாலும், நீதிமன்றம் எத்தனை நாட்களுக்கு அனுமதி வழங்கும் என்பது இன்று தெரியவரும்.

புகாரால் வெடித்த விவகாரம்:

இந்தக் குதிரை பேர சதித் திட்டம் வெளிச்சத்திற்கு வந்ததற்கு இளையராஜா என்பவர் கொடுத்த புகாரே முக்கியக் காரணமாகும். தற்போது கைதாகியுள்ள திருநாவுக்கரசு என்பவர்தான் முதன்முதலில் இளையராஜா என்பவரைத் தொடர்புகொண்டு, தவெக எம்.எல்.ஏ.க்களைப் பேரம் பேசி இழுப்பது குறித்துப் பேசியுள்ளார். இதையறிந்த இளையராஜா உடனடியாக போலீசில் புகார் அளிக்க, அதன் பேரிலேயே இந்த மிகப்பெரிய கைது நடவடிக்கைகளும், அடுத்தடுத்த போலீஸ் பாய்ச்சல்களும் அரங்கேறியுள்ளன.

மேலும் படிக்க: ஆடு திருடிய வழக்கறிஞருக்கு அரசுப் பதவி வழங்கியது நியாயமா முதல்வரே? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

நீதிமன்ற அனுமதி கிடைத்து, முக்கியக் குற்றவாளிகளான திருநாவுக்கரசு உள்ளிட்ட ஆறு பேரையும் போலீஸ் காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்கும் பட்சத்தில், இந்த கோடிக்கணக்கான ரூபாய் பேரத்தின் பின்னணியில் உள்ள அரசியல் சூத்திரதாரிகள் யார், இதற்குப் பின்னால் இருக்கும் பணப் புழக்கம் எத்தகையது போன்ற முழுமையான உண்மைகளும், புதிய தகவல்களும் வெளிவரும் என காவல்துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Follow Us