“தவெகவின் ‘குதிரை பேரம்’ உண்மையாக இருந்தால் ஆளுநர் நடவடிக்கை எடுக்கட்டும்”.. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!!
தொடர்ந்து பேசிய அவர், "சம்பந்தப்பட்ட அதிமுக, திமுக அல்லது தவெக ஆகிய கட்சிகளின் தலைமைகளிடம் எந்த கேள்வியும் எழுப்பாமல், இடையில் இருக்கும் எங்களைப் போன்றவர்களிடம் கேள்வி எழுப்புவதால் எந்தப் பயனும் இல்லை. உண்மையான குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களிடம் கேட்க தைரியமில்லாமல், எங்களிடம் கேட்டுவிட்டு, பின்னர் 'திருமாவளவன் மழுப்புகிறார்' என்று செய்தி போடுவது அர்த்தமில்லாதது என்றார்.
சென்னை, ஜூலை 06: தமிழக வெற்றிக் கழகத்தினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவது உண்மையாக இருந்தால், அதுகுறித்து ஆளுநர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கட்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் தற்போது திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கிடையே பல்வேறு அரசியல் மோதல்களும், குற்றச்சாட்டுகளும் பரவி வருகின்றன. குறிப்பாக, திமுகவிலிருந்து எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சி நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அதிமுகவின் கூடாரத்தை காலி செய்யப் போவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கள் ஆகியவை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
இதையும் படிக்க : வாய்ப்பு தேடி ஓடும் ஓடுகாலி ஆதவ் அர்ஜுனா.. சட்ட நடவடிக்கை பாயும்.. கே.பி.முனுசாமி அதிரடி எச்சரிக்கை!
ஊடகங்களுக்கு அறிவுரை:
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவனிடம், அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சினை மற்றும் தவெகவின் குதிரை பேரம் குறித்து பாஜாக தரப்பில் ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதனால் அதிருப்தியடைந்த அவர், சம்பந்தமில்லாதவர்களிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்கள்:
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் ஒன்றின் மீது ஒன்று மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. இதில் குதிரை பேரத்தில் ஈடுபடுவது தவெக என்றால், அதன் தலைமையிடம் போய் நேராக இந்த கேள்வியைக் கேளுங்கள். ஒருவேளை திமுக இதில் ஈடுபடுகிறது என்றால், திமுக தலைமையிடம் கேளுங்கள். இதனால் அதிமுக பாதிக்கப்படுகிறது என்று நீங்கள் பரிதாபப்பட்டால், அதிமுக தலைமையிடம் இந்த கேள்வியை எழுப்புங்கள்” என்று கூறினார்.
திரிபுவாதம் செய்ய வேண்டாம்:
தொடர்ந்து பேசிய அவர், “சம்பந்தப்பட்ட அதிமுக, திமுக அல்லது தவெக ஆகிய கட்சிகளின் தலைமைகளிடம் எந்த கேள்வியும் எழுப்பாமல், இடையில் இருக்கும் எங்களைப் போன்றவர்களிடம் கேள்வி எழுப்புவதால் எந்தப் பயனும் இல்லை. உண்மையான குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களிடம் கேட்க தைரியமில்லாமல், எங்களிடம் கேட்டுவிட்டு, பின்னர் ‘திருமாவளவன் மழுப்புகிறார்’ என்று செய்தி போடுவது அர்த்தமில்லாதது. இது அரசியல் புரிதல் இல்லாமல் பேசுகிற பேச்சு” என்று மிகக் கடுமையான தொனியில் செய்தியாளர்களைச் சாடினார்.
அதிமுகவின் மௌனம் ஏன்?
“முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தது தொடர்பாக நீங்கள் அவரிடமே நேரடியாகக் கேட்பதுதான் முறையாக இருக்கும். அவர் என்ன காரணத்திற்காக அதிமுகவிலிருந்து வெளியேறினார்? அதிமுகவிலிருந்து ஆட்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது, குதிரை பேரம் நடக்கிறது என்ற விவாதங்கள் ஒருபுறம் தீவிரமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. நிலைமை இப்படி இருக்க, அதிமுகவுக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி அதிமுக தலைவர்கள் ஏன் இதுவரை வாய் திறக்காமல் இருக்கிறார்கள்?
இதையும் படிக்க: தவெகவில் இணைந்த திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் – தமிழக அரசியலில் பரபரப்பு
தவெகவுக்கு எதிராக ஆவேசப்பட வேண்டியவர்கள், ஆத்திரப்பட வேண்டியவர்கள், கொந்தளிக்க வேண்டியவர்கள் ஏன் இவ்வளவு அமைதி காக்கிறார்கள்? அதன் பொருள் என்ன ஆளுநரைச் சந்தித்து மனு கொடுப்பதை ஒரு கடமையாகச் செய்கிறார்களே தவிர, இதை ஒரு வெகுமக்கள் கருத்தாக மாற்றுவதற்கு அவர்கள் எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. ‘எங்கள் கட்சியைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள், இதை அனுமதிக்க மாட்டோம்’ என்ற குரலையும் அவர்கள் எழுப்பவில்லை; பொதுமக்களிடமும் இதுகுறித்து முறையிடவில்லை என்று அவர் கூறினார்.