போலி ஆவணங்கள் மூலம் தனியார் வங்கியில் ரூ.80 லட்சம் மோசடி.. மேலாளர் உள்ளிட்ட 7 பேர் கைது!
Tanjore Loan Scam Exposed | தஞ்சாவூரில் உள்ள தனியார் வங்கி கிளை ஒன்றில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.80 லட்சம் மோசடி செய்யப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், இந்த மோசடி தொடர்பாக வங்கி மேலாளர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர், ஜூலை 06 : தஞ்சாவூரில் (Tanjore) உள்ள தனியார் வங்கி ஒன்றில் போலி ஆவணங்களை தயாரித்து ரூ.80 லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வங்கி மேலாளரே மோசடிக்கு துணை போயுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.80 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
போலி ஆவணங்களை பயன்படுத்தி தனியார் வங்கியில் கடன்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியின் கிளையில்,2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம், முத்துகுளம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், குமரேசன், பாஸ்கர், நடராஜன், தேவிகா, மகாலட்சுமி ஆகியோர் தங்களது நிலங்களை அடமாணம் வைத்து சுமார் ரூ.79 லட்சத்து 90 ஆயிரத்து 992 கடனாக பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க : புழல் சிறையில் பரபரப்பு.. பிரபல ரவுடியை தீர்த்துக்கட்ட ரூ.1 கோடி டீல்.. காவலர்களிடம் சிக்கிய 4 கைதிகள்!




ஆனால், அவர்கள் அனைவரும் தாங்கள் பெற்ற கடனுக்கான மாத தவணை தொகையை முறையாக செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், அவர்கள் கடன் பெற பயன்படுத்திய ஆவணங்களை வங்கி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது கடன் வாங்குவதற்காக பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
7 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்
இந்த விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், போலி ஆவணங்களை சமர்பித்து கடன் பெற்ற 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தான் இந்த மோசடியில் வங்கி மேலாளருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : தவெக அரசுக்கு கவசமாகவும் மதிமுக இருக்கும் – வைகோ உறுதி
அதன் அடிப்படையில், மோசடியின் பின்னால் இருந்த முக்கிய குற்றவாளியான பூதலூர் தனியார் வங்கி கிளையில் பணம் ஒப்புதல் அளிக்கும் கிளை மேலாளரான தேசிங்கு ராஜன் என்ற 40 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இந்த மோசடி தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.