AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஒரே நாளில் ஆளுநரைச் சந்தித்த திமுக – அதிமுக”.. சந்தேகம் கிளப்பும் சிபிஎம் சண்முகம்!!

தேர்தல் நடந்து முடிந்த ஒரு மாத காலத்திற்குள் மக்கள் பிரதிநிதிகள் ராஜினாமா செய்வதும், உடனே மற்றொரு கட்சியில் இணைவதும் தமிழ்நாட்டில் எல்லோரும் சேர்ந்து கண்டிக்க வேண்டிய ஒரு ஆரோக்கியமற்ற அரசியல் போக்கு ஆகும். வாக்களித்த மக்களைப் பற்றியோ, மீண்டும் தேர்தல் நடத்துவதால் ஏற்படும் நெருக்கடிகளைப் பற்றியோ கவலைப்படாமல் சுயநலத்திற்காக இவ்வாறு செய்கிறார்கள்.

“ஒரே நாளில் ஆளுநரைச் சந்தித்த திமுக – அதிமுக”.. சந்தேகம் கிளப்பும் சிபிஎம் சண்முகம்!!
பெ.சண்முகம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 06 Jul 2026 07:40 AM IST

சென்னை, ஜூலை 06: தமிழக ஆளுநரின் செயல்பாடுகள், அரசியல் கட்சிகளின் திடீர் சந்திப்புகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, பாஜக, அதிமுக மற்றும் திமுக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நாளில் ஆளுநரைச் சந்தித்து புகார் அளித்துள்ள விவகாரம் குறித்து அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். அவருடைய பேட்டியின் விரிவான செய்தித்தொகுப்பை இக்கட்டுரையில் காணலாம்.

இதையும் படிக்க : கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டு பணி தொடக்கம்? பெரும் பரபரப்பு!

ஆளுநரின் வரம்பு மீறிய செயல்பாடுகள்:

அரசியல் சாசனம் ஆளுநருக்கு வழங்கி இருக்கக்கூடிய அதிகாரங்களை மீறி, மதுரையில் ஆய்வுக்கூட்டம் நடத்தியது போன்ற நடவடிக்கைகள் வன்மையான கண்டனத்திற்குரியது. ஏற்கனவே ஆர்.என்.ரவி அவர்கள் ஆளுநராக இருந்தபோது இத்தகைய அணுகுமுறையை மேற்கொண்டபோதெல்லாம் தமிழகம் ஒட்டுமொத்தமாக எதிர்த்துள்ளது. தற்போது புதிதாக வந்துள்ள ஆளுநர் அருளேகர் அவர்கள் அதே அணுகுமுறையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது பொருத்தமானது அல்ல.

மக்கள் பவனை பொதுமக்கள் நேரடியாக அணுகலாம் என ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இருக்கும் நிலையில், ஆளுநர் தானாகவே பிரச்சினைகளைத் தீர்த்துவிடுவது போல பேசுவது பொருத்தமற்றது. ஆளுநருக்கு அப்படி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எந்த வாய்ப்பும் அரசியல் சாசனத்தில் கிடையாது. இந்த அணுகுமுறையை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒரே நாளில் சந்தித்த திமுக, அதிமுக:

பாஜக, அதிமுக மற்றும் திமுக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நாளில் ஆளுநரைச் சந்தித்து புகார் அளித்துள்ளனர். பாஜாக ஆளுநரைச் சந்திப்பதில் எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை; ஏனெனில் அவர்கள் மத்திய அரசின் முகவராகப் பார்க்கப்படுகிறார்கள். ஆனால், ஆளுநர் பதவியே வேண்டாம் என்றும், ஆளுநர் என்பவர் வெறும் தபால்காரர் என்றும் கூறிவந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே நாளில் ஆளுநரைச் சந்தித்து இருப்பது ஏன்? என்பது குறித்து ஆழமாக யோசிக்க வேண்டியுள்ளது, இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து அந்த இரண்டு கட்சிகளும்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

தவெக-விற்கான ஆதரவும் கூட்டணி நிலைப்பாடும்:

தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) நாங்கள் ஏன் ஆதரிக்கிறோம் என்பதற்கான அரசியல் பூர்வமான காரணங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக விளக்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது போல சுயநல நோக்கோடு இந்த முடிவு எடுக்கப்படவில்லை. தற்போது இடதுசாரி கட்சிகள் இணைந்து மாநில அளவிலான ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளோம். நாங்கள் அந்த அணியிலோ, இந்த அணியிலோ இல்லை; இடதுசாரி அணியாகத் தனித்துச் செயல்படுகிறோம். அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெளியிலிருந்து அளிக்கும் ஆதரவு தொடர்ந்து நீடிக்கும், அதில் எந்த மாற்றமும் இல்லை.

எம்.எல்.ஏக்கள் ராஜினாமா – ஆரோக்கியமற்ற அரசியல்:

தேர்தல் நடந்து முடிந்த ஒரு மாத காலத்திற்குள் மக்கள் பிரதிநிதிகள் ராஜினாமா செய்வதும், உடனே மற்றொரு கட்சியில் இணைவதும் தமிழ்நாட்டில் எல்லோரும் சேர்ந்து கண்டிக்க வேண்டிய ஒரு ஆரோக்கியமற்ற அரசியல் போக்கு ஆகும். வாக்களித்த மக்களைப் பற்றியோ, மீண்டும் தேர்தல் நடத்துவதால் ஏற்படும் நெருக்கடிகளைப் பற்றியோ கவலைப்படாமல் சுயநலத்திற்காக இவ்வாறு செய்கிறார்கள். இதனை ஊக்கப்படுத்தும் வகையில் தவெக அவர்களை கட்சியில் உடனே சேர்த்துக்கொள்வதும் கண்டிக்கத்தக்கது; இதுகுறித்த எங்களது கண்டனத்தை தவெகவிடமும் தெரிவித்துள்ளோம்.

இதையும் படிக்க : விவசாய பணிகளில் களமிறங்கிய வடமாநில தொழிலாளர்கள்.. சம்பளமும் குறைவாக வாங்குகின்றனராம்.. என்ன நடக்கிறது தஞ்சாவூரில்!

ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு கண்டனம்:

கரூர் நெரிசல் மரண விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சண்முகம், இந்த வழக்கு தற்போது சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை) விசாரணையில் உள்ளது. விசாரணை இன்னும் முடியாத நிலையில், ஒரு பொறுப்பான அமைச்சர் இவ்வாறு பேசுவது வழக்கு விசாரணையில் குறுக்கிடுவதற்குச் சமம். விசாரணை முடிவு வரட்டும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே இவ்வாறு கருத்து தெரிவிப்பது ஏற்புடையது அல்ல என்று கூறினார்.

Follow Us