புழல் சிறையில் பரபரப்பு.. பிரபல ரவுடியை தீர்த்துக்கட்ட ரூ.1 கோடி டீல்.. காவலர்களிடம் சிக்கிய 4 கைதிகள்!
Puzhal Prison: சென்னை புழல் மத்திய சிறையில் பிரபல ரவுடி வெள்ளை காளியை ரூ.1 கோடி பேரம் பேசி சக கைதிகள் 4 பேர் கொல்ல திட்டமிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரபல புழல் சிறை செயல்பட்டு வருகிறது. இந்த சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என சுமார் 4,500 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல ரவுடியான மதுரையை சேர்ந்த வெள்ளை காளி என்பவர் கொலை வழக்கு தொடர்பாக தண்டனை கைதியாக இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே போல, கும்பகோணத்தை சேர்ந்த பிரபல ரவுடியான லாலி மணிகண்டன் என்பவரும் கொலை வழக்கு தொடர்பாக அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், லாலி மணிகண்டனிடம், பிரபல ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்வதற்கு பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டு அவரை கொலை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறை வளாகத்தில் பெரிதளவு ஆள் நடமாட்டம் இருக்காது என்று கூறப்படுகிறது.
பிரபல ரவுடியை கொல்ல சதித்திட்டம்
இதை சாதகமாக வைத்து பிரபல ரவுடி வெள்ளை காளியை, லாலி மணிகண்டன் உள்ளிட்ட 4 கைதிகள் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால், இந்த கொலைக்கு திட்டம் தீட்டியதை சிறைத்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்படி, இந்த தகவலை சிறைத்துறைக்கு தெரிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட பிரபல ரவுடியான வெள்ளை காளி மற்றும் லாலி மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரை தனித்தனியாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: எதிர்ப்பை மீறி கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டு பணி தொடக்கம்? பெரும் பரபரப்பு!




ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டு முன்பணம் அளிப்பு
பிரபல ரவுடி வெள்ளை காளியை கொலை செய்வதற்கு சிறைக்கு வெளியே இருந்து சிலர் லாலி மணிகண்டனிடம் பேரம் பேசி உள்ளனர். இதற்காக, மொத்தம் ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டு முதல் கட்டமாக ரூ.25 லட்சம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை 5-ஆம் தேதி) வெள்ளை காளியைக் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்ததும், இன்று சிறை அதிகாரிகள் பொதுவாக அதிக எண்ணிக்கையில் இருக்க மாட்டார்கள் என்பதால், அந்தச் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
4 கைதிகள் சேலம் மற்றும் கடலூர் சிறைக்கு மாற்றம்
இதைத் தொடர்ந்து, பிரபல ரவுடியான லாலி மணிகண்டன் சேலம் மத்திய சிறைக்கும், அவருடன் இருந்த 3 சிறைக் கைதிகள் கடலூர் மத்திய சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். பிரபல ரவுடி வெள்ளை காளி மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளை காளியை போலீசார் பெரம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்றபோது கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அப்போது, ஒருவர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வாய்ப்பு தேடி ஓடும் ஓடுகாலி ஆதவ் அர்ஜுனா.. சட்ட நடவடிக்கை பாயும்.. கே.பி.முனுசாமி அதிரடி எச்சரிக்கை!