மது விருந்தில் ஏற்பட்ட தகராறு.. அலற அலற குளத்தில் மூழ்கடித்து நண்பன் கொலை.. நாகையில் பரபரப்பு சம்பவம்!
Nagapattinam Youth Murder: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நண்பர்கள் இருவர் மது அருந்தி விட்டு குளத்தில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் ஏற்பட்ட திடீர் மோதலில் ஒருவரை குளத்து நீரில் மூழ்கடித்து கொலை செய்த நபரை தலைஞாயிறு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு அருகே உள்ள பண்ணத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கார்த்தி ( 39 வயது). இவர், திருப்பூரில் செயல்பட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் கார்த்தி ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில், கார்த்தி அந்தப் பகுதியில் உள்ள வாய்க்காலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக தலை ஞாயிறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடல் கூறாய்வு செய்வதற்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கார்த்தி பெற்றோர் தலைஞாயிறு காவல் நிலையத்தில் சந்தேகம் மரணம் என புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கார்த்தி குளத்தில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
நண்பர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தினர்
இதில், திருப்பூரில் இருந்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த கார்த்தி சம்பவத்தன்று தனது நண்பனான கொக்காலடி பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி என்பவரது மகன் விக்னேஸ்வரன் ( 31 வயது) என்பவருடன் மது அருந்தியதாக தெரிகிறது. இருவரும், அதிகளவு மது அருந்திய நிலையில், அதிக மதுபோதையால் அருகில் உள்ள குளத்தில் இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
மேலும் படிக்க: சென்னையில் இருந்து திருச்சிக்கு 3 மணி நேரத்தில் பயணிக்கலாம்.. தமிழகத்தின் 2வது பெரிய விரைவுச்சாலை பணிகள் தொடக்கம்!




குளத்தில் மூழ்கடித்து நண்பர் கொலை
ஒரு கட்டத்தில், வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில், விக்னேஸ்வரன், கார்த்தியின் தலையை பிடித்து குளத்தில் மூழ்கடித்துள்ளார். அதிக போதையில் இருந்த கார்த்தி அவரிடம் இருந்து தப்பிக்க முடியாமல் குளத்து நீரில் மூழ்கினார். மூச்சு விட முடியாமல் கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, கார்த்தியின் சடலத்தை விக்னேஸ்வரன் தூக்கி சென்று அந்தப் பகுதியில் உள்ள வாய்க்காலில் வீசிவிட்டு தலைமறைவாகி உள்ளார்.
தலைமறைவான குற்றவாளியை கைது செய்த போலீஸ்
தொடர்ந்து, தலைமறைவாகி உள்ள விக்னேஸ்வரனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதில், அவர் தலை ஞாயிறு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், தலைஞாயிறு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் பதுங்கி இருந்த விக்னேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: கறுப்பு பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக்கூடு.. உளுந்தூர்பேட்டையை பரபரப்புக்கு உள்ளாக்கிய சம்பவம்!