இன்ஸ்டாகிராமில் குழந்தைகளுக்கு எதிரான விளம்பரங்கள்? மெட்டாவுக்கு மத்திய அரசு சம்மன்
இந்தியாவில் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் குழந்தைகளுக்கு எதிரான விளம்பரங்கள் வெளியானதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், மெட்டா நிறுவனத்தின் அதிகாரிகளிடம் இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது. இந்த விவகாரம் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் குழந்தைகளுக்கு எதிரான விளம்பரங்கள் வெளியானதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், மெட்டா நிறுவனத்தின் அதிகாரிகளிடம் இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவின் பேரில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் குழந்தைகளுக்கு எதிரான விளம்பரங்கள்?
பிபிசி வெளியிட்ட அறிக்கையே இந்த சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. பிபிசி வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் இன்ஸ்டாகிராமில் வெளியான சில விளம்பரங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும் அந்த விளம்பரங்களில் இடம் பெற்றுள்ள லிங்க்குகள் நேரடியாக பயனர்களை டெலிகிராம் சேனல்களுக்கு அழைத்து செல்வதாகவும், அதில் பாலியல் ரீதியான கண்டென்ட்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அவற்றை ரூ.99 செலுத்தி பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெட்டா விளக்கம்
இந்த நிலையில் பிபிசி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மெட்டா பதிலளித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் அளித்த விளக்கத்தில், சம்பந்தப்பட்ட விளம்பரங்களும் அவற்றை வெளியிட்ட இன்ஸ்டாகிராம் கணக்குகளும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், விதிமுறைகளை மீறும் விளம்பரங்களை கண்டறிய ஆட்டோமேட்டிக் டெக்னாலாஜி பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், பயனர்களும் விதிமுறையை மீறும் விளம்பரங்கள் குறித்து புகாரளிக்க முடியும் என விளக்கமளித்துள்ளது. இதற்கிடையில் டெலிகிராம் நிறுவனம் குழந்தைகளுக்கு எதிரான கண்டென்ட்களை பரப்பியதாக கூறப்படும் 2.74 லட்சத்துக்கும் அதிகமான வாட்ஸ்அப் சேனல்கள் மற்றும் குழுக்களை நீக்கியுள்ளதாக விளக்கமளித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு சம்மன் அனுப்புவது இது 2வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த யூசர்நேம் வசதி தொடர்பாக மெட்டாவுக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியிருந்தது. பயனர்கள் தங்கள் அடையாளத்தை போலியாக பயன்படுத்தும் அபாயம் இருப்பதால் உரிய விளக்கம் அளிக்கும் வரை அந்த வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.