VinFast VF3 EV: அட்டகாசமான தோற்றம் மற்றும் குறைந்த விலை – களமிறங்குகிறது வின்ஃபாஸ்டின் மைக்ரோ கார்
இந்தியச் சந்தையில் நுழைந்துள்ள சமீபத்திய பிராண்ட் வின்ஃபாஸ்ட் ஆகும். வியட்நாமை சேர்ந்த வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட் ஏற்கனவே இந்தியாவில் 2 மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, 'VF3' என்ற பெயரில் மைக்ரோ எலக்ட்ரிக் கார் பிரிவில் ஒரு புதிய வாகனத்தை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் தயாராகி வருகிறது.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் போட்டி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வின்ஃபாஸ்ட் (VinFast) இந்தியச் சந்தையில் நுழைந்துள்ள சமீபத்திய பிராண்ட் ஆகும். வியட்நாம் நாட்டை சேர்ந்த வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட் ஏற்கனவே இந்தியாவில் 2 மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் VF6 மற்றும் VF7 ஆகிய மாடல்களுடன் வின்ஃபாஸ்ட் இந்தியச் சந்தையில் நுழைந்தனர். இந்த 2 மாடல்களும் ஏற்கனவே சந்தையில் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்நிறுவனம் தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக, மைக்ரோ எலக்ட்ரிக் கார் பிரிவில் ஒரு புதிய வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
களமிறங்குகிறது வின்ஃபாஸ்டின் மைக்ரோ கார்
அந்த வகையில் VF3 மாடல் இந்த 2026 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. காம்பாக்ட் எஸ்யுவி என்று அழைக்கப்படும் இந்த கார், பார்ப்பதற்கு மாருதி ஜிம்னி என்ற காரின் சிறிய வடிவம் போலத் தோற்றமளிக்கும். வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் கார்களிலேயே இது மிகச்சிறிய காராகும். இது மாநகரம் மற்றும் நகரங்களில்பயணம் செய்பவர்களுக்கு இந்த வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது, சீன வாகன உற்பத்தியாளரான எம்ஜியின் கோமட் மாடல் இந்திய மார்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வின்ஃபாஸ்ட் VF3க்கு Comet தான் முக்கிய போட்டியாளராக இருக்கும். சிறிய பாக்ஸ் போன்ற டிசைன் கொண்ட இந்த வாகனம் 3114 மிமீ நீளம், 1679 மிமீ அகலம் மற்றும் 1652 மிமீ உயரம் கொண்டது. இது 191 மிமீ என்ற சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸ் வசதியையும் கொண்டுள்ளது.
இந்த கார் பின்புறத்தில் பொருத்தப்பட்ட 43 பிஎச்பி திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இந்க காரின் பின்பக்க வீல்களுக்கு பவரை செலுத்தும் இந்த வாகனத்தின் அதிகபட்ச டார்க் அளவு 110 நியூட்டன் மீட்டராகும். இது 0 முதல் 50 கி.மீ வேகத்தை எட்ட 5.3 வினாடிகளை எடுத்துக்கொள்கிறது. இந்த வாகனம் 18.6 kW திறன் கொண்ட லித்தியம் – அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த பேட்டரியை 36 நிமிடங்களில் 70 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த வாகனம் 210 கி.மீ தூரம் வரை பயணிக்கும் திறனைக் கொண்டுள்ளது.
வாகனத்தின் உட்புறத்தைப் பொறுத்தவரை, மிக எளிமையான மற்றும் குறைவான அம்சங்களைக் கொண்ட அமைப்புகள் காணப்படுகின்றன. இந்த வாகனத்தில் 10 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, 4 விதமாகச் சரிசெய்யக்கூடிய முன்பக்க இருக்கைகள், முழுமையாக மடக்கக்கூடிய பின்பக்க இருக்கைகள், பல செயல்பாடுகளைக் கொண்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் கீலெஸ் எண்ட்ரி போன்ற வசதிகள் இடம்பெற்றிருக்கும். தற்போதைய தகவல்களின்படி, இந்தியாவில் இந்த வாகனத்தின் விலை 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.