காவல்துறைக்கே விபூதி அடித்த பெண் இன்ஸ்பெக்டர்: தங்க மோசடியில் கைது!
Land Fraud Targeting Cops: குறைந்த விலையில் தங்கம் மற்றும் நிலம் தருவதாகக் கூறி பொதுமக்களிடமும், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரிடமும் ரூ.20 கோடி வரை மோசடி செய்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடிக்குத் திட்டமிட்ட இவரது உறவினர் பிரபுமணி, சென்னை கொடுங்கையூரில் 'விநாயகம் என்டர்பிரைசஸ்' என்ற போலி நிறுவனத்தைத் தொடங்கி முதலீடுகளைப் பெற்றுள்ளார்.
சென்னையில் குறைந்த விலையில் தங்கக் காசுகள் மற்றும் வீட்டு மனைகள் வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 200-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.20 கோடி வரை சுருட்டிய வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பொதுமக்களைத் தாண்டி, நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களையே குறிவைத்து இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில், இத்திட்டங்களை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர். குறிப்பாக, மக்களவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில், ஆய்வாளர் ஷீலா மேரியின் அரசு வாகனத்திலேயே வைத்து பிரபுமணி முதலீட்டாளர்களுக்குத் தங்கக் காசுகளை விநியோகித்துள்ளார். காவல்துறை வாகனத்திலேயே இந்த பரிவர்த்தனைகள் நடந்ததால், சக போலீஸாரும் அதிகாரிகளும் இவர்களைக் கண்மூடித்தனமாக நம்பி கோடிக்கணக்கான ரூபாயைக் கொட்டியுள்ளனர்.
ஆய்வாளரின் வாகனத்தில் நடந்த தட்டுகெட்ட வியாபாரம்
சென்னை ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் ஷீலா மேரி. இவர் தனது உறவினரான பிரபுமணி என்பவருடன் கூட்டு சேர்ந்து, கொடுங்கையூர் பகுதியில் ‘விநாயகம் என்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் தங்கத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம், மலிவு விலையில் தங்கக் காசுகள் மற்றும் வீட்டு மனைகள் எனப் பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தினர். கடந்த 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில், இத்திட்டங்களை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர். குறிப்பாக, மக்களவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில், ஆய்வாளர் ஷீலா மேரியின் அரசு வாகனத்திலேயே வைத்து பிரபுமணி முதலீட்டாளர்களுக்குத் தங்கக் காசுகளை விநியோகித்துள்ளார்.
திடீர் தலைமறைவும் தொடர் புகார்களும்
மக்களிடம் கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டிய பிரபுமணி, கடந்த 2024-ஆம் ஆண்டின் இறுதியில் திடீரென நிறுவனத்தை மூடிவிட்டுத் தலைமறைவானார். இதனால் ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தங்களின் ரூ.20 கோடி இழப்பு குறித்துப் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், முதலில் பிரபுமணியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பணியிடை நீக்கமும் பெண் ஆய்வாளர் பிடியாவதும்
பிரபுமணியிடம் நடத்திய விசாரணையில், இந்த மெகா மோசடிக்குக் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி முழு உடந்தையாக இருந்தது ஆவணப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஷீலா மேரி உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார். போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க கடந்த சில வாரங்களாகத் தலைமறைவாக இருந்த ஷீலா மேரியைத் தனிப்படை அமைத்துத் தேடி வந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பின் இன்று அவரைக் கைது செய்தனர்.
திருமண மண்டபங்கள் வாங்கியதாக வாக்குமூலம்
கைது செய்யப்பட்ட ஷீலா மேரியிடம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மோசடி செய்த பணத்தைக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு திருமண மண்டபங்களை அவர் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அந்த சொத்துக்களின் அசல் ஆவணங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர்.
மேலும், இந்த மோசடிப் பின்னணியில் வேறு ஏதேனும் உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளதா, ஏமாற்றப்பட்ட பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்தச் சம்பவம் தமிழக காவல்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.