“அதிமுகவில் மீண்டும் டிடிவி தினகரனை இணைக்க வேண்டும்”.. இபிஎஸ்-யிடம் நிர்வாகிகள் வைத்த கோரிக்கை!!
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, "டிடிவி தினகரனும், நீங்களும் (இபிஎஸ்) இணைந்து செயல்பட்டால் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். குறிப்பாக டெல்டா பகுதியில் கட்சி சற்று சோர்வாக இருக்கிறது என்றனர்.
சென்னை, ஜூலை 07: அதிமுகவை நிர்மூலமாக்க சிலர் முயற்சிக்கின்றனர், ஆனால் அது ஒருபோதும் நடக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தனர். இதுபற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
மேலும் படிக்க: ஆடு திருடிய வழக்கறிஞருக்கு அரசுப் பதவி வழங்கியது நியாயமா முதல்வரே? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!
தோல்வியைக் கண்டு துவளக் கூடாது:
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, அதிமுகவில் வெற்றி, தோல்வி என்பது தொடர்ச்சியாகப் பார்த்து வரக்கூடிய ஒன்றுதான் என்று குறிப்பிட்ட அவர், அதிமுக தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல், மீண்டும் ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல எழுச்சி பெற்று வரும் என்று நிர்வாகிகளிடம் நம்பிக்கை தெரிவித்தார். தற்போது கட்சியிலிருந்து விலகி மாற்றுக் கட்சிக்குச் செல்பவர்கள் குறித்துப் பேசிய அவர், அவர்கள் அனைவரும் கட்சிக்கு உண்மையான விசுவாசிகள் அல்ல என்று சாடினார். தங்களது சுய லாபத்திற்காகவும், பதவி சுகத்திற்காகவும் மற்றும் தங்களின் பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவுமே அவர்கள் மாற்றுக் கட்சிக்குச் சென்றுள்ளதாகக் கடுமையாக விமர்சித்தார்.
மக்கள் ஏமாந்துவிட்டனர்:
தேர்தலில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள் தற்போது ஏமாந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், வாக்கு செலுத்திய ஒரு மாதத்திற்குள்ளேயே மக்கள் அதனை உணர்ந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து, வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் ஆகியவற்றைக் எதிர்கொள்ள கட்சி நிர்வாகிகள் தங்களின் உரிய உழைப்பைத் தர வேண்டும் என்றும், அதற்கான அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்தில் எழுந்த கோரிக்கை:
இதனிடையே, சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, “டிடிவி தினகரனும், நீங்களும் (இபிஎஸ்) இணைந்து செயல்பட்டால் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். குறிப்பாக டெல்டா பகுதியில் கட்சி சற்று சோர்வாக இருக்கிறது. கீழ்மட்ட தொண்டர்களும், பொதுமக்களும் இதையே விரும்புகிறார்கள். அதோடு, அண்ணன்-தம்பி போல நாம் பிரிந்திருப்பதால் மாற்று சக்திகள் லாபமடைகின்றன என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேர வழக்கு.. அடுத்ததடுத்து கைதாகும் நபர்கள்.. திருவல்லிக்கேணி போலீசார் அதிரடி!
எடப்பாடி பழனிசாமியின் ரியாக்ஷன் என்ன?
டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி கோபப்பட்டாரா என்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி கழகச் செயலாளர் பத்மகுமரேசனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அவர் எந்த ஒரு கோபமும் படவில்லை. மிகவும் அமைதியாகவும், பொறுமையாகவும் எங்களது கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்டு உள்வாங்கிக் கொண்டார் பின்னர், ‘அவர் (டிடிவி தினகரன்) வேறொரு தனி கட்சி நடத்திக் கொண்டிருக்கிறாரே என்று மிகவும் மென்மையாகப் பதிலளித்தார்” என்று கூறினார்.