காவிரி மேகதாது விவகாரத்தில் ராகுல் காந்தி மௌனம் காப்பது ஏன்?.. விஜய பிரபாகரன் சரமாரி கேள்வி!!
காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு எதிராகச் செயல்படும் சூழலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தமிழக காங்கிரஸாரும் அமைதி காப்பது ஏன் என்று தேமுதிக இளைஞரணித் தலைவர் விஜய பிரபாகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தருமபுரி, ஆகஸ்ட் 02: காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி தொடர்பாகத் தமிழக அரசியல் களத்தில் விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் காங்கிரஸ் கட்சியையும் அதன் மூத்த தலைவர் ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, ஒகேனக்கல்லில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விஜய் பிரபாகரன், கன்னட மொழியில் பேசி கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிக்க: தமிழகத்தில் தீவிரமடையும் நாய்க்கடி அவலம்.. இந்த ஆண்டில் இதுவரை 4.68 லட்சம் பேர் பாதிப்பு; 24 பேர் உயிரிழந்த சோகம்!
ராகுல் காந்தி வாய் திறக்காதது ஏன்?
இதுகுறித்து கண்டன பொதுக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது, காவிரி விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை காட்டி வரும் மௌனத்தைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். “டெல்லியிலும் பிற இடங்களிலும் பல விவகாரங்களுக்காகச் சட்டையைக் கிழித்துக் கொண்டு வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக விவசாயிகளின் மிக முக்கியமான காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் மட்டும் ஏன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அமைதி காக்கிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், கர்நாடக மாநிலத்தில் துணை முதலமைச்சராக இருக்கும் டி.கே. சிவகுமார் மேகதாது அணைக் கட்டுவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழக மக்களின் உரிமைகளும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்போது காங்கிரஸ் தலைமை மௌனம் சாதிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் வினா தொடுத்தார்.
திமுக பிச்சை போட்டு ஜெயித்த கட்சி காங்கிரஸ்:
தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்த விஜய பிரபாகரன், “இங்குள்ள தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் திமுக போட்ட பிச்சையில்தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், தமிழக விவசாயிகளின் உரிமைக்காகக் குரல் கொடுக்க இவர்களுக்குத் தைரியம் இல்லை. கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும்போது ஒரு மாதிரியும், தமிழகத்திற்கு வரும்போது வேறு மாதிரியும் பேசும் இரட்டை வேடத்தை காங்கிரஸ் உடனடியாகக் கைவிட வேண்டும்” என்று சீறினார்.
அவர் மேலும் பேசுகையில், “காலை நேரங்களில் இரு கட்சித் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து டிபன் சாப்பிட்டுக்கொண்டு நட்புறவைப் பேணுகிறார்கள். ஆனால் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் போகும்போதும், கர்நாடக அரசு தன்னிச்சையாகச் செயல்படும்போதும் அதற்கு எதிராகப் போராடவோ குரல் கொடுக்கவோ இவர்கள் முன்வருவதில்லை. பயந்துகொண்டு பின்வாங்குகிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.
இதையும் படிக்க: கர்நாடகா போனா முதல்வரை கட்டி வச்சிடுவாங்க.. விஜய் பற்றி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்!
தமிழக உரிமைகளைப் அடகு வைக்கக்கூடாது:
கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் தமிழக விவசாயிகளுக்குத் துரோகம் இழைப்பதாகக் கூறிய விஜய பிரபாகரன், காவிரி விவகாரத்தில் எந்தவொரு அரசியல் சமரசத்திற்கும் இடம் தரக்கூடாது என்றும், தமிழகத்திற்குரிய தண்ணீர் உரிய முறையில் கிடைப்பதை உறுதிசெய்ய அனைத்துத் தரப்பினரும் உண்மைத் தன்மையோடு போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.