கர்நாடகா கபினி அணையில் நீர் திறப்பு 25,000 கன அடியாக அதிகரிப்பு.. தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு!!
Kabini Dam Water Release Increase: கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பைக் கருதி உபரிநீரான 25,000 கன அடி நீர் அப்படியே தமிழகத்திற்குத் திறந்துவிடப்பட்டு வருகிறது.
மைசூர், ஆகஸ்ட் 02: கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மைசூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கபினி அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் 25,000 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை அப்டேட் இதோ!!
கபினி அணையின் தற்போதைய நீர்மட்டம்:
கபினி அணையின் மொத்தக் கொள்ளளவான 2,284 அடியில், நேற்று இரவு நிலவரப்படி நீர்மட்டம் 2,281 அடியை எட்டியிருந்தது. அப்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,000 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 12,000 கன அடியாகவும் இருந்தது.
ஆனால், நள்ளிரவில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தீவிரமடைந்ததால் நீர்வரத்து வினாடிக்கு 25,000 கன அடியாக உயர்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 2,282 அடியை எட்டியுள்ளது. அணை முழுமையாக நிரம்புவதற்கு இன்னும் 2 அடிகள் மட்டுமே தேவைப்படும் நிலையில், நீர்வரத்தை நிறுத்தினால் அடுத்த 2 முதல் 3 மணி நேரங்களில் அணை நிரம்பிவிடும் என்பதால், அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நீர்வளத்துறை அதிகாரிகள் அணைக்கு வரும் 25,000 கன அடி நீரை அப்படியே ஆற்றில் திறந்து விட்டுள்ளனர்.
கே.ஆர்.எஸ் அணையின் நிலவரம்:
கபினி அணையைப் போலவே கர்நாடகாவில் உள்ள மற்றொரு முக்கிய அணையான கிருஷ்ணராஜ சாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 7,000 கன அடியாக இருந்த கே.ஆர்.எஸ் அணைக்கான நீர்வரத்து, தற்போது 9,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கபினி அணை அமைந்துள்ள பகுதி கேரள மாநில எல்லைக்கு அருகில் உள்ளதால், வயநாடு உள்ளிட்ட கேரள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் கணித்துள்ளனர். இதனால் அணைக்கு வரும் அதிகப்படியான தண்ணீர் தொடர்ந்து முழுமையாக வெளியேற்றப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்திற்கான காவிரி நீர் பங்கீடு நிலவரம்:
கடந்த ஜூலை 29-ஆம் தேதி முதல் 15 நாட்களுக்குத் தினமும் வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிக்க: கர்நாடகா போனா முதல்வரை கட்டி வச்சிடுவாங்க.. விஜய் பற்றி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்!
தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கபினி அணை நிரம்பி உபரி நீர் முழுமையாகத் திறந்துவிடப்படுவதால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட அளவை விடக் கூடுதல் தண்ணீர் தமிழகத்திற்குக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காவிரி பாசனப் பகுதி விவசாயிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.