“கோடியில் அபராதம்!”.. 6 ஆண்டுகளாக போலி கருப்பட்டி தயாரித்து ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு.. உடன்குடியில் அதிர்ச்சி!!
Fake Karupatti GST Evasion: பிரசித்தி பெற்ற உடன்குடி கருப்பட்டியில் சர்க்கரையைக் கலந்து போலி கருப்பட்டி தயாரித்து, கடந்த 6 ஆண்டுகளாகப் பல கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியேப்பில் ஈடுபட்ட 5 வியாபாரிகளுக்கு நெல்லை ஜிஎஸ்டி அதிகாரிகள் ரூ.38 கோடி அபராதம் விதித்துள்ளனர்.
திருநெல்வேலி, ஜூலை 22: பிரசித்தி பெற்ற உடன்குடி கருப்பட்டியில் சர்க்கரையைக் கலந்து போலி கருப்பட்டி தயாரித்து, கடந்த 6 ஆண்டுகளாகப் பல கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 5 வியாபாரிகளுக்குத் நெல்லை ஜிஎஸ்டி அதிகாரிகள் ரூ.38 கோடி அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் பனை மரத்திலிருந்து கிடைக்கப்பெறும் பதநீரைக் காய்ச்சி அசல் கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. உடன்குடி கருப்பட்டிக்குச் சிறப்புமிக்க புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், நாடு முழுவதும் இதற்குப் பெரும் வரவேற்பு உள்ளது.
மேலும் படிக்க: ரூ.2 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு கை நீட்டிய வயர்மேன்.. கம்பி எண்ண வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.. தென்காசியில் அதிரடி நடவடிக்கை!
5% ஜிஎஸ்டி வரி விதிப்பு:
பனைத் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், பதநீரிலிருந்து நேரடியாகத் தயாரிக்கப்படும் அசல் கருப்பட்டி மற்றும் கற்கண்டுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இருப்பினும், இவற்றை வணிக ரீதியாகக் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யும்போது 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அதேவேளையில், பதநீரில் 75%-க்கும் அதிகமாகச் சர்க்கரை கலந்து கருப்பட்டி மற்றும் கற்கண்டு தயாரித்தால் அதற்கு 18% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.
சர்க்கரை மூட்டைகளால் அம்பலமான மோசடி:
உடன்குடி பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வியாபாரிகள் அதிகளவில் சர்க்கரை மூட்டைகளைக் கொள்முதல் செய்வதாக திருநெல்வேலி ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடந்த சில வாரங்களில் மட்டும் உடன்குடி பகுதியில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான சர்க்கரை மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.38 கோடி வரி ஏய்ப்பு:
அதிகாரிகள் நடத்திய ஆழமான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பதநீரில் 60% முதல் 70% வரை சர்க்கரையைக் கலந்து போலி கருப்பட்டி தயாரித்து, அதனை ஒரிஜினல் உடன்குடி கருப்பட்டி என்று கூறி ரூ.6 கோடி வரை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். சர்க்கரை கலந்து தயாரிக்கும் கருப்பட்டிக்கு 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஆனால், அசல் கருப்பட்டி எனக் பொய் கூறி வெறும் 5% வரியை மட்டுமே செலுத்தி, கடந்த 6 ஆண்டுகளாகப் பல கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியேப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும் படிக்க: அம்மனாக திரிஷா – கோவில் திருவிழா பேனரால் சர்ச்சை – 2 பேர் மீது வழக்குப்பதிவு
இதையடுத்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்ட உடன்குடியைச் சேர்ந்த 5 முக்கிய வியாபாரிகளுக்கு நெல்லை ஜிஎஸ்டி அதிகாரிகள் ரூ.38 கோடி அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.