தவெக தலைமையில் புதிய கூட்டணி? ஆதரவு கட்சிகளின் கூட்டத்திற்கு தவெக அழைப்பு
தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்த கட்சிகள் அனைத்தும் தற்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கிறது. கூடுதலாக வைகோவின் மதிமுகவும திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கிறது. இந்த நிலையில் தவெக தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க தவெக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, ஜூன் 28: 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்க காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய முஸ்லீம் லீக் கட்சிகள் ஆதரவு அளித்தன. காங்கிரஸ் மட்டும் கூட்டணியில் இணைந்த நிலையில் மற்ற கட்சிகள் திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவும், தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு என தெரிவித்தன.கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர மற்ற கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் தவெக பங்கு கொடுத்தது.
தவெக தலைமையில் புதிய கூட்டணி?
இந்த நிலையில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்த கட்சிகள் அனைத்தும் தற்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கிறது. கூடுதலாக வைகோவின் மதிமுகவும திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கிறது. இந்த நிலையில் தவெக தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க தவெக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தவெக தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க : மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமாருக்கு சபரீசன் நோட்டீஸ்




தற்போது விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2029 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு அணியாக இணைந்து செயல்பட தங்கள் அரசு அமைய ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் கூட்டத்திற்கு தவெக அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக விசிக தலைவர் திருமாவளவனை அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஜூன் 28, 2026 மாலை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும், ஜூலை 1, 2026 அன்று நடைபெற உள்ள தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், பிற கட்சித் தலைவர்களுடனும் ஜூலை 1, 2026 அன்று முதல்வர் விஜய் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், புதிய கூட்டணியை உருவாக்குவது, கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார்?, கூட்டணிக்கான பெயர், கட்சிகளின் சார்பில் ஒருங்கிணைப்பு பிரதிநிதிகளை நியமிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : குழந்தைக்கு பின்னால் ஒளிந்துகொண்டு…. அமைச்சர் பதவி விலக வேண்டும் – திமுக ஆர்பாட்டம் அறிவிப்பு
மேலும் காவிரி, மேகதாது, இரு மொழிக் கொள்கை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிரதான பிரச்சனைகளுக்கு கொள்கை அளவில் செயல்திட்டங்கள் வகுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக 2 மதிமுக எம்எல்ஏகளை ராஜினாமா செய்ய விஜய் தன்னிடம் கேட்டதாகவும், அவர்களை இடைத்தேர்தலில் வெற்றி பெற செய்வது தனது பொறுப்பு என உத்தரவாதம் அளித்ததாகவும் வைகோ சமீபத்தில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.