“பாஜகவின் வீழ்ச்சிக்கு Gen-Z புரட்சியே தொடக்கப்புள்ளி!”.. NTA-வை உடனடியாகக் கலைக்க திருமாவளவன் வலியுறுத்தல்!!
Thirumavalavan MP Speech in Delhi: டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய Gen-Z புரட்சியால் பாஜக அரசு பணியத் தொடங்கியுள்ளது என்றும், ஒன்றிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி ஆவேசமாகப் பேசினார்.
டெல்லி, ஜூலை 29: மக்களவையில் பொதுத்தேர்வு திருத்தச் சட்ட மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், பாஜக அரசின் கல்வி மற்றும் தேர்வு நடைமுறைகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதுகுறித்து மக்களவையில் பேசிய தொல். திருமாவளவன், “பாரதிய ஜனதா கட்சியின் வீழ்ச்சிக்கு டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ‘Gen-Z’ தலைமுறை இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் புரட்சியே தொடக்கப் புள்ளியாகும்.
மேலும் படிக்க: தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்ட விவகாரம்: யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதல் இடம் – த.வெ.க விளக்கம்.
வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்:
இதனை மாணவர்கள் நடத்தும் சாதாரணப் போராட்டம் என்று பாஜக அரசு அலட்சியமாகக் கருதியது. ஆனால், அது கட்டுப்பாடற்ற மாபெரும் மக்கள் புரட்சியாக மாறியதன் விளைவாகவே, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டிய நெருக்கடி உருவானது. பாஜக அரசு மாணவர்களின் போராட்டத்திற்கு முன்னால் பணிந்து சரணடைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறை வெறியாட்டங்களைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். அவர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.”
“NTA-வை உடனடியாகக் கலைக்க வேண்டும்!”
தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் நீட் தேர்வு முறை குறித்து அவர் மேலும் பேசுகையில், தேசிய அளவில் ஒரே தேர்வை நடத்துவதும், அதற்காக NTA அமைப்பை நிறுவியிருப்பதும் மாநில அரசுகளின் உரிமைகளையும் எளிய மக்களையும் வஞ்சிக்கும் செயலாகும். நீட் தேர்வில் வைக்கப்படும் தகுதிப் புள்ளி என்ற நடைமுறையால், போதிய மதிப்பெண் பெறாத பணக்கார மாணவர்கள் லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிகிறது.
கட்டணக் கொள்ளை சட்டப்பூர்வமாக்கம்:
முன்பு கேபிடேஷன் பீஸ் என்ற பெயரில் நடந்த கொள்ளையை, நீட் தேர்வு முறை தற்போது சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இதனால் எளிய மாணவர்களுக்கோ, அரசுப் பள்ளி மாணவர்களுக்கோ எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எனவே, தேசிய தேர்வு முகமையை உடனடியாகக் கலைக்க வேண்டும். மாநில அரசுகளே தங்களின் நுழைவுத் தேர்வுகளை வரையறுக்கவும் நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும்.
மேலும் படிக்க: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா – அண்ணாமலை கேள்வி..
“கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றுக!”
நீட் தேர்வில் சீர்திருத்தங்கள் செய்வதோ அல்லது சட்டங்களைக் கடுமையாக்குவதோ தீர்வாகாது என்று சுட்டிக்காட்டிய திருமாவளவன், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பியும் அதை நிராகரித்தது கண்டனத்திற்குரியது என்றார். “தேசிய அளவில் நீட் தேர்வை முற்றாகக் கைவிட வேண்டும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு – ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.