“தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்!”.. பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!!
"நான் தொகுதி முழுவதும் ஆய்வு செய்தபோது, மக்கள் என்னிடம் மதுபானக் கடைகள் எதுவும் மூடப்படவில்லை; வெறும் பெயரளவில் மட்டுமே தடை என்று கூறினார்கள். இந்த விவகாரத்தை நான் நிச்சயமாக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன். ஒரு வாக்குறுதியைச் சொன்னால், அதனை அரசு நிச்சயம் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
சென்னை, ஜுன் 04: தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான அரசு, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் முறையாக நிறைவேற்றாததால் பல்வேறு தரப்பு மக்களும் கோபத்தில் இருப்பதாகத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்துப் பேசினார். அப்போது, “அரசாங்கத்திடம் உள்ள நிதிநிலையைப் பார்த்துத்தான் கட்சிகள் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்க வேண்டும். ஒருமுறை வாக்குறுதி கொடுத்துவிட்டுத் தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்துவிட்டால், மக்கள் நிச்சயம் அது குறித்துக் கேள்வி கேட்பார்கள்; அதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது” என்று குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: “பழி போடுவதால் மாற்றம் வராது.. தேர்தல் மனநிலையிலிருந்து வெளியே வாங்க”.. தவெக அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
நீண்ட வரிசையில் முதியவர்கள்:
தொடர்ந்து பேசிய அவர், “மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும்; அவர்களின் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும். விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று வாக்குறுதி அளித்தார்கள்; ஆனால், நேற்றைய எனது கள ஆய்வின்போது கூட முதியவர்கள் ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நிற்பதை நான் பார்த்தேன். இந்தத் திட்டம் இன்னும் முறையாகச் செயல்படவில்லை” என்று சுட்டிக்காட்டினார்.
மதுபானக் கடைகள் மூடப்படவில்லை:
தேர்தல் வாக்குறுதியின்படி டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவோம் என்று கூறினார்கள் எனச் சுட்டிக்காட்டிய பிரேமலதா, “நான் தொகுதி முழுவதும் ஆய்வு செய்தபோது, மக்கள் என்னிடம் மதுபானக் கடைகள் எதுவும் மூடப்படவில்லை; வெறும் பெயரளவில் மட்டுமே தடை என்று கூறினார்கள். இந்த விவகாரத்தை நான் நிச்சயமாக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன். ஒரு வாக்குறுதியைச் சொன்னால், அதனை அரசு நிச்சயம் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது:
தமிழகத்தில் தற்பொழுது சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மிகத் தீவிரமாக (பீக்கில்) உள்ளதாகப் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். முதலமைச்சர் அவர்களே, தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனைத் தடுக்க ‘சிங்கப்படை’யை உடனடியாகத் தீவிரமாக அமையுங்கள். சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைத் தடுத்து நிறுத்தி, பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது ஒரு நல்ல அரசின் கடமையாகும்” என்று வலியுறுத்தினார்.
அமைச்சர்களுக்கு கொஞ்சம் டைம் கொடுப்போம்:
புதிய அமைச்சர்களின் செயல்பாடு குறித்த கேள்விக்கு, “புதிய அரசு பொறுப்பேற்று இன்றுடன் (ஜூன் 4) சரியாக 30 நாட்கள் (ஒரு மாதம்) நிறைவடைந்துள்ளது. இப்பொழுதுதான் ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைச்சர்களை அறிவித்து வருகிறார்கள். எனவே, அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பதற்கு அவர்களுக்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடுப்போம்” என்று ஓரளவு மென்மையான போக்கைக் கையாண்டார்.
இதையும் படிக்க : இனி ஜெட் வேகத்தில் அரசு திட்டங்கள்.. மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
முதல்வராக விஜய் செயல்பட வேண்டும்:
திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துக்கள் குறித்த கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க மறுத்த பிரேமலதா, “மற்றவர்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு நாங்கள் பதில் அளிப்பதில்லை” என்று கூறினார். இருப்பினும், “அவர் இப்பொழுது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார். அவருக்கு ஓட்டுப் போட்டவர்கள், போடாதவர்கள் என அத்தனை பேருக்கும் அவர்தான் பொதுவான முதல்வர். எனவே, இன்னும் தேர்தல் நேரப் பிரச்சார மேடையில் பேசுவதைப் போலவே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு முதலமைச்சராக நாட்டுக்கும் மக்களுக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற ஆக்கப்பூர்வமான திட்டங்கள் குறித்தும், ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் சமமான உரையாகவும், நடுநிலையான செயல்பாடாகவும் அவருடைய உரையும் நிர்வாகமும் இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.