தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம்.. முதல்வர் விஜய் தலைமையில் ஜூன் 5-ல் கூடுகிறது!!
விரைவில் கூடவிருக்கும் தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் புதிய அரசின் முதல் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், அரசின் கொள்கை வழிகாட்டுதல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, ஜுன் 4: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தலைமையில் முதன்முறையாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜூன் 5ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. புதிய அரசு பொறுப்பேற்று சுமார் 25 நாட்களுக்குப் பிறகு நடைபெறும் இந்த முதல் கூட்டத்தில், மாநிலத்தின் முக்கிய கொள்கை முடிவுகள் மற்றும் புதிய தொழில் முதலீடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க : தனிப்பட்ட குற்றங்களுக்கு தமிழக அரசை எப்படி குறை சொல்ல முடியும்? அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி
கூட்டணி அமைச்சர்கள் பங்கேற்கும் முதல் கூட்டம்:
தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில் முதல்வர் விஜய் தலைமையில், தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களுடன் இணைந்து, கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ஐயூஎம்எல் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் முதன்முறையாகப் பங்கேற்கின்றனர்.
முக்கிய ஆலோசனைக் குறிப்புகள்:
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதற்காக அனைத்து அமைச்சர்களுக்கும் பிரத்யேக குறிப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டு, அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ள முக்கிய அம்சங்களாக புதிய தொழில் முதலீடுகள், மதுபானக்கடைகள் மீதான கொள்கை முடிவு, சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டுவது உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய தொழில் முதலீடுகள் & வேலைவாய்ப்பு:
தமிழக இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. குறிப்பாக, ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் நிர்வாகிகள் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியுள்ள நிலையில், புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படவுள்ளது.
மதுபானக் கடைகள் மீதான கொள்கை முடிவு:
மாநிலத்தின் முக்கிய கொள்கை முடிவுகளில் ஒன்றான மதுபானக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மிக முக்கியமான விவாதங்கள் நடத்தப்பட்டு, முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
சட்டமன்றக் கூட்டத்தொடர் & ஆளுநர் உரை:
விரைவில் கூடவிருக்கும் தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் புதிய அரசின் முதல் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், அரசின் கொள்கை வழிகாட்டுதல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க: “நெஞ்சில் குடியிருக்கும் தளபதிக்கு” வீட்டு பூஜை அறையில் சிலை.. தினமும் கற்பூரம் காட்டி உருகும் தவெக நிர்வாகி.. எங்கு தெரியுமா..!
ஜூன் 5ஆம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கவுள்ள இந்த அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.