பெரம்பூர் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு.. முதலமைச்சர் விஜய்க்கு மீண்டும் நோட்டீஸ் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த தேர்தல் வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் சென்றடையவில்லை என மனுதாரர் ஆர்.டி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஜூலை 21, 2026: பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் பெற்ற தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட விஜய், 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 1,20,365 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆர்.டி.சேகர் 66,650 வாக்குகளைப் பெற்றார்.
இந்த வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர், பெரம்பூர் தொகுதி வாக்காளர்களான தினேஷ் மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.
முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து வழக்கு:
இதில், தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் தாக்கல் செய்திருந்த தேர்தல் மனுவில், விஜய் தனது வேட்பு மனுவில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, அவரது சொத்து விவரங்கள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான தகவல்கள் முறையாகவும் முழுமையாகவும் தெரிவிக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேட்பு மனுவில் முக்கியமான தகவல்கள் மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தேர்தல் விதிமுறைகளின்படி அந்த வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டது முறையானதா என்பது குறித்தும் மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் உள்ள தகவல்கள் மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும், விஜயின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்க்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்:
இந்த தேர்தல் வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் சென்றடையவில்லை என மனுதாரர் ஆர்.டி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து, முதலமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரி உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜயின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல் வெற்றி தொடர்பான சட்டரீதியான அம்சங்கள் குறித்து அடுத்தடுத்த விசாரணைகளில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை அரசியல் வட்டாரங்களிலும், தமிழக அரசியல் கட்சிகளிடையேயும் கவனம் பெற்றுள்ளது.