AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“டாஸ்மாக் தனியார்மயம் ஆக்கப்படுகிறதா?”.. என்ன சொல்கிறார் அமைச்சர் விக்னேஷ்?

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று பெண்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்து வருவது குறித்துக் கேட்டபோது, "விற்பனை நேரத்தைக் குறைப்பது நல்ல விஷயம்தான். கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது போல, விற்பனை நேரத்தையும் ஒரு 2 மணி நேரம் வரை குறைப்பது குறித்து நிச்சயமாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.

“டாஸ்மாக் தனியார்மயம் ஆக்கப்படுகிறதா?”.. என்ன சொல்கிறார் அமைச்சர் விக்னேஷ்?
அமைச்சர் விக்னேஷ்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 07 Jun 2026 08:24 AM IST

சென்னை, ஜுன் 07: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாக்கப்பட உள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டாஸ்மாக் நிர்வாகத்தில் உள்ள ஊழல் சிண்டிகேட்டுகளை உடைப்பது மற்றும் கடைகள் மூடல் குறித்த பல்வேறு முக்கிய விபரங்களைப் பகிர்ந்து கொண்டார். டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாக்கப்பட உள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் உண்மையற்றது என்று அவர் மறுத்தார். மேலும், மதுபான விற்பனையில் வரும் சொற்ப லாபத்தை விட, அதன் கொள்முதலில் தான் இவ்வளவு காலம் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து வந்ததாகக் குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க: “தவெக-வுக்கு கொள்கை, கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும் கிடையாது!”.. சரமாரியாக விளாசிய முத்தரசன்!

“யாரும் வெளியே சொல்லாத, யாருக்கும் தெரியாத ஒரு பெரிய சிண்டிகேட் இந்தத் துறையில் நீண்ட நாட்களாக இயங்கி வந்தது. ‘நான் எடுக்கும் போது நீ சொல்லாத, நீ எடுக்கும் போது நான் சொல்ல மாட்டேன்’ என்ற அண்டர்ஸ்டாண்டிங்கில் திருட்டு நடந்து வந்தது. இதனை முதன்முதலில் உடைத்தது நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசுதான்” என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

717 கடைகள் மூடப்பட்டதன் பின்னணி:

கடந்த காலங்களில் ₹50,000 மட்டுமே வியாபாரமாகும் கடைகளையும், பார் வசதி இல்லாத கடைகளையும் தேடிப் பிடித்து மூடிவிட்டு, 500 கடைகளை மூடிவிட்டோம் என்று கணக்குக் காட்டி ஏமாற்றினர் என்று முன்னாள் அமைச்சர்களை விக்னேஷ் விமர்சித்தார். ஆனால், தற்போதைய த.வெ.க அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை குறித்து அவர் விளக்கியதாவது, தற்போதைய அரசு இதுவரை இல்லாத வரலாற்றுச் சாதனையாக 717 டாஸ்மாக் கடைகளை ஒரே நேரத்தில் மூடியுள்ளது. இதில் மூடப்பட்ட சில கடைகளின் ஒரு நாள் வியாபாரம் மட்டும் குறைந்தபட்சம் ₹5 லட்சம் முதல் அதிகபட்சம் ₹25 லட்சம் வரை இருந்த கடைகளாகும். இதனால் அரசுக்குச் சராசரியாக ₹7,000 கோடி முதல் ₹8,000 கோடி வரை வருவாய் இழப்பு/நஷ்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

“வருமானம் ₹1,000 கோடியோ அல்லது ₹10,000 கோடியோ, அதைப்பற்றி கவலை இல்லை, மக்களுக்காக இந்த முடிவை உடனே செயல்படுத்துங்கள்” என்று முதலமைச்சர் உத்தரவிட்டதன் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட மாற்றுத் துறைகள் மூலம் அரசுக்கான வருவாயைப் பெருக்கிய பின்னர், அடுத்தடுத்த கட்டங்களாக அனைத்துக் கடைகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றார்.

விற்பனை நேரம் குறைக்கப்படுமா?

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று பெண்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்து வருவது குறித்துக் கேட்டபோது, “விற்பனை நேரத்தைக் குறைப்பது நல்ல விஷயம்தான். கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது போல, விற்பனை நேரத்தையும் ஒரு 2 மணி நேரம் வரை குறைப்பது குறித்து நிச்சயமாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்கள் விவகாரம்

டாஸ்மாக் ஊழியர்கள் பணிநீக்கம் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து அமைச்சர் விளக்கம் அளித்தார். கடந்த காலங்களில் 33,000 ஊழியர்கள் இருந்த இடத்தில் தற்போது ஓய்வு மற்றும் இறப்பு காரணமாக 23,000 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ₹10 கூடுதலாக வைத்து விற்றது, பாட்டில்களை உடைத்துச் சரியான கணக்குக் காட்டாதது போன்ற காரணங்களால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சுமார் 900-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குத் தற்போது நிபந்தனைகளுடன் மீண்டும் பணி செய்ய அனுமதி (Re-work) வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

இதையும் படிக்க : அதிமுகவுக்கு அடுத்த ஷாக்.. தவெக-வில் ஐக்கியமான 4 முன்னாள் அமைச்சர்கள்.. அதிரும் தமிழக அரசியல்!

எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்குப் பதில்

“ஆட்சிக்கு வந்து 20 நாட்கள்தான் ஆகிறது. இந்தத் துறையைக் கையாளத் தெரியவில்லை என்று கூறும் முன்னாள் அமைச்சர்கள், அவர்களிடம் அதிகாரம் இருந்தபோது ஏன் இந்த ₹10 கூடுதல் விலையை ஒழிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “நாங்கள் அமைதியாக இருந்ததற்குத் தங்களுக்கு எதுவும் தெரியாது என நினைத்து இஷ்டத்திற்குப் பேச வேண்டாம். இந்த 5 ஆண்டு கால முடிவில் இந்த மதுவிலக்குத் துறை தமிழ்நாட்டில் எப்படி மாற்றப்பட்டிருக்கும் என்பதைப் பார்ப்பீர்கள், இது என் சவால்” என்று கூறி அமைச்சர் தனது பேட்டியை நிறைவு செய்தார்.

Follow Us