AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Agriculture Budget 2026: உழவர் AI செயலி திட்டம்.. விதைப்பு முதல் விற்பனை வரை டிஜிட்டல் வழிகாட்டல்!!

Tamilnadu Agri Budget 2026: விவசாயிகள் தங்களது நிலம், பயிர் மற்றும் வானிலை தொடர்பான துல்லியமான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்காக, நவீனத் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இத்திட்டம் 2026–2027ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன் வாயிலாகவே இந்த அனைத்து அறிவுசார் வேளாண் சேவைகளையும் மிக எளிதாகப் பெற முடியும்.

Tamil Nadu Agriculture Budget 2026: உழவர் AI  செயலி திட்டம்.. விதைப்பு முதல் விற்பனை வரை டிஜிட்டல் வழிகாட்டல்!!
அமைச்சர் விக்னேஷ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 06 Aug 2026 11:27 AM IST

சென்னை, ஆகஸ்ட் 06: விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில் தகவல்களைக் கொண்டு சேர்ப்பது, சரியான நேரத்தில் பெய்யும் மழைக்கு நிகரானது என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசு 2026–2027ஆம் நிதியாண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், ‘உழவர் செயற்கை நுண்ணறிவு செயலியை’  அறிமுகப்படுத்தியுள்ளது. நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விவசாயிகளின் அன்றாடச் சாகுபடிப் பணிகளை எளிமையாக்கி, அவர்களின் வருமானத்தைப் பெருக்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இதையும் படிக்க: Tamil Nadu Agriculture Budget 2026 LIVE: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அப்டேட்ஸ்!

தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு:

இத்திட்டம் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மற்றும் இயந்திரக் கற்றல் (Machine Learning – ML) தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளது. பயிர் விதைப்பு செய்யும் காலம் தொடங்கி, அறுவடை செய்து சந்தைக்கு எடுத்துச் செல்லும் வரையிலான அனைத்து நிலைகளிலும் தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் விவசாயிகளுக்கு இதன் மூலம் உடனுக்குடன் வழங்கப்படும்.

வழங்கப்படவுள்ள முக்கியச் சேவைகள்:

துல்லியமான வானிலை முன்னறிவிப்பு: நிகழ்நேர தட்பவெப்பநிலை மாற்றங்கள், மழைப்பொழிவு குறித்த துல்லியமான தகவல்கள் உடனுக்குடன் கைபேசிக்கு அனுப்பப்படும்.

மண் நலம் மற்றும் மண் வள ஆலோசனைகள்: விவசாயிகளின் நிலப்பகுதியின் மண் தன்மைக்கேற்ப, என்ன வகையான உரங்களைச் சமசீராகப் பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை: பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அவற்றுக்கான உடனடித் தீர்வுகள் மற்றும் மருந்து தெளித்தல் ஆலோசனைகள் வழங்கப்படும்.

பருவநிலைக்கு ஏற்ற பயிர் தேர்வு: மாறிவரும் காலநிலை மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப எந்தெந்தப் பயிர்களைச் சாகுபடி செய்தால் அதிக விளைச்சல் பெற முடியும் என்ற தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்.

சந்தை நிலவரம் & விலை விவரங்கள்: பல்வேறு சந்தைகளில் விளைபொருட்களுக்கான அன்றாட நிலவரம், தேவைகள் மற்றும் சந்தை விலைகள் குறித்த புதுப்பிப்புகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.

குரல்வழிச் சேவைகள்: எழுத்து வடிவிலான தகவல்களைப் படிக்கச் சிரமப்படும் விவசாயிகளும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில், குரல்வழியாகவே உரையாடித் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் சிறப்பு வசதி இதில் இடம்பெறும்.

அரசுச் திட்டங்கள் & மானிய விவரங்கள்: வேளாண்மைத் துறை வாயிலாகச் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த முழு விவரங்களும் இதில் இடம்பெறும்.

விவசாயிகள் பயன்பெறும் முறை: இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து அறிவுசார் வேளாண் சேவைகளையும் விவசாயிகள் தங்களின் தொலைபேசி மற்றும் கைபேசி (Mobile Phone) வாயிலாகவே மிகவும் எளிமையான முறையில் பெற முடியும்.

இதையும் படிக்க: Tamil Nadu Agriculture Budget: உழவர் ஐடி பெற்ற விவசாயிகளுக்கு ‘மண்வள அட்டை’.. அமைச்சர் விக்னேஷ் முக்கிய அறிவிப்பு!!

நிதி ஒதுக்கீடு:

தமிழ்நாட்டில் நவீனச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வேளாண் துறையில் புகுத்தி, டிஜிட்டல் முறையில் உழவர்களுக்குச் சேவை வழங்கும் இத்திட்டத்தினை 2026–2027ஆம் நிதியாண்டில் திறம்படச் செயல்படுத்த மாநில நிதியிலிருந்து ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Follow Us