Tamil Nadu Weather forecast: உருவானது அக்வான் புயல்…. இந்த 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் – மீனவர்களுக்கு எச்சரிக்கை
Tamil Nadu weather today : வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நவம்பர் 16, 2026 நேற்று புயலாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிகத்தின் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, நவம்பர் 17 : வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நவம்பர் 16, 2026 நேற்று புயலாக உருவாகியுள்ளது. அக்வான் (Cyclone Akvan) என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னைக்கு கிழக்கே 610 கி.மீ. தொலைவில் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுப்பெற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 17, 2026 இன்று மாலை தீவிர புயலாக நிலவக்கூடும் என்றும் இந்த புயல் நவம்பர் 20, 2026 அன்று நண்பகல் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நவம்பர் 17, 2026 இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : “தமிழக வெற்றிக் கழக ஆட்சி கலப்பட ஆட்சி.. சூரசம்ஹாரமே சாட்சி!” – முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்!




3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
அதனைத் தொடர்ந்து நவம்பர் 18, 2026 நாளையும் மற்றும் நவம்பர் 19, 2026 வியாழக்கிழமையும் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்பதால் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் பிற வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே அக்வான் புயல் எதிரொலியாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடியில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களிலும் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கள்ளக்குறிச்சி ஆட்சியர்- தவெக எம்எல்ஏ விவகாரம்.. மாவட்ட பொ.அமைச்சர் வன்னி அரசு கூறிய அந்த வார்த்தை!
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வடதமிழக கடற்கரை பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக, வருகிற நவம்பர் 20, 2026 வரை வடகடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.