டெல்லியில் பரபரப்பு.. சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் பின்வாசல் வழியாகச் சென்ற முதல்வர் விஜய்!
CM Vijay In Sonia Gandhi Book Launch Event : டெல்லியில் நடந்த சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற முதல்வர் விஜய் பின்வாசல் வழியாக நிகழ்ச்சி நடைபெறும் நட்சத்திர விடுதிக்கு சென்றது பேசும் பொருளாகி உள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பின்வாசல் வழியாக நிகழ்ச்சி நடைபெறும் ஹோட்டலுக்குள் சென்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரும், கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி எழுதிய Belonging A Journey of Love என்ற சுயசரிதை புத்தகம் வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை ( நவம்பர் 16- ஆம் தேதி) டெல்லியில் உள்ள ஐடிசி மௌரியா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் மற்றும் இண்டியாக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஐடிசி மெளரியா ஹோட்டலுக்கு பின்வாசல் வழியாக சென்ற முதல்வர்
அதன்படி, அவர் இன்று பிற்பகல் தனி விமானம் மூலமாக சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு, நிகழ்ச்சி நடைபெறும் ஐடிசி மெளரியா நட்சத்திர ஹோட்டலின் பிரதான வாயில் வழியாக செல்லாமல் பின்வாசல் வழியாக சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன. அவருடன், பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடன் சென்றார். பல்வேறு மாநில அரசியல் கட்சி தலைவர்கள் பிரதான வாயில் வழியாக சென்ற நிலையில், தமிழக முதல்வர் மட்டும் ஏன் பின் வாசல் வழியாக சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.




மேலும் படிக்க: போலி நூல்கள் கொள்முதல் விவகாரம்.. வசமாக சிக்கிய அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர்.. கைது செய்த போலீசார்!
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமா என்று கேள்வி
அத்துடன் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக முதல்வர் விஜய் பின்வாசல் வழியாக சென்றாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே வேளையில், பலத்த பாதுகாப்பு உடைய தலைவர்களும், பல்வேறு மாநில முதல்வர்களும், முக்கிய பிரதிநிதிகளும் பிரதான வாசல் வழியாக சென்ற நிலையில், முதல்வருக்கு அத்தகைய பெரிய அச்சுறுத்தல் ஏதும் உள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட ஒரு இணையவாசி அதில் கூறியிருப்பதாவது:
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் சோனியா காந்தி ராகுல் காந்தி அகிலேஷ் யாதவ் என அனைத்து தலைவர்களும் செல்லும் வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக சென்ற தமிழ்நாடு முதல்வர் விஜய்
இப்படி சென்ற ஒரே தலைவரும் முதல்வர் விஜய் தான்! https://t.co/hUkL0kmwWT
— Niranjan kumar (@niranjan2428) November 16, 2026
முன்வாசல் வழியாக வராத ஒரே தலைவர் சிம் விஜய் தான்
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பல்வேறு மாநில முதல்வர்கள், ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்று உள்ளனர். இவர்கள் அனைவரும் முன் வாசல் வழியாகவே உள்ளே சென்றனர். காஷ்மீர் முதல்வர், முன்னாள் முதல்வர் ஆகியோருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு உள்ளது. இந்த வழியில் வராத ஒரே தலைவராக தமிழக முதல்வர் விஜய் மட்டுமே உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி ஆட்சியர்- தவெக எம்எல்ஏ விவகாரம்.. மாவட்ட பொ.அமைச்சர் வன்னி அரசு கூறிய அந்த வார்த்தை!