செக்கானூரணி லாக்கப் மரணம்.. ஓட்டுநரை போலீசார் அடித்து கொன்றனரா? போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி தகவல்!
Chekkanurani Police Custody Died : செக்கானுரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. இதில், அவரது உடலில் 5 இடங்களில் ரத்த காயம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள அழகர் நாயக்கன்பட்டியில் வசித்து வந்த பாலகிருஷ்ணன் என்பவர், கடந்த நவம்பர் 2- ஆம் தேதி ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரியில் மதுரை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, வாலாந்தூர் அருகே லாரியில் தீ விபத்து ஏற்பட்டு 60 மூட்டை ஏலக்காய்கள் மற்றும் லாரி ஆகியவை சாம்பல் ஆனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, வாலாந்தூர் காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகார் அளித்த நிலையில், கடந்த நவம்பர் 13- ஆம் தேதி அவரை செக்கானூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஆய்வாளர் முத்து என்பவர் விசாரணைக்காக அழைத்து சென்றார். அங்கு, காவல் நிலையத்தில் இரவு முழுவதும் பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இரவு நேரத்தில் காவல் ஆய்வாளர் முத்து மற்றும் மற்றொரு காவலர் ஆகியோர் வெளியே சென்றனர்.
காவல் நிலைய கழிவறையில் தூக்கிட்ட நிலையில் மீட்பு
காவல் நிலையத்தில், தலைமை காவலர் பழனிவேல்ராஜன், பெண் காவலர் கலைச்செல்வி ஆகியோர் மட்டுமே பணியில் இருந்தனர். இந்த நிலையில், ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அதிகாலை 5:58 மணிக்கு கழிவறைக்கு சென்ற அவர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், பாலகிருஷ்ணன் சடலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில், ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உடலில் சுமார் 5 இடங்களில் ரத்த காயம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “சென்னையில் காருடன் கடத்தப்பட்ட 12 வயது சிறுமி சீர்காழியில் மீட்பு!”.. மர்ம நபர்களை வலைவீசி தேடும் போலீசார்!
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் வெளியான அதிர்ச்சி தகவல்
அதன்படி, பாலகிருஷ்ணனின் இடது தோள்பட்டை, வலது நெற்றி, அவரது கைவிரல்கள், வயிறு மற்றும் கழுத்து ஆகிய இடங்களில் ரத்த காயம் இருந்துள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அவரது சடலத்தை ரசாயன ஆய்வு மற்றும் திசு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பாலகிருஷ்ணன் உயிர் இழப்புக்கான முக்கிய காரணம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
போலீசார் அடித்து கொலை செய்தனரா
ஏற்கனவே, காவல் நிலையத்தில் வைத்து பாலகிருஷ்ணன் காவலர்கள் அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு இருப்பதாக அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பெரும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதில், உரிய விசாரணை மேற்கொண்டு நீதி கிடைக்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். இந்த வழக்கு பூதாகரம் ஆன நிலையில், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பாம்பன் பாலத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய பகீர் சம்பவம்.. ஓடும் ரயிலில் இருந்து கடலில் குதித்த ஆண், பெண்.. கதிகலங்க வைக்கும் பின்னணி!