Cyclone Akvan: நெல்லூர் துனி இடையே கரையை கடக்கும் அக்வான் புயல்.. தமிழகத்தில் மழை இருக்குமா?
Tamil Nadu Rains: நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவம்பர் 16, 2026: வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவம்பர் 16) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது தீவிரப் புயலாகவும், அதனைத் தொடர்ந்து மிகத் தீவிரப் புயலாகவும் வலுப்பெற்று ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் வரும் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (நவம்பர் 15) நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவு 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது இன்று காலை 8.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நிலவுகிறது.
தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து வலுப்பெற்று நாளை (நவம்பர் 17) மாலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிரப் புயலாக மாறக்கூடும்.
இதையடுத்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20ஆம் தேதி நண்பகல் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எங்கெல்லாம் கனமழை இருக்கும்?
நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேலும் படிக்க: “சென்னையில் காருடன் கடத்தப்பட்ட 12 வயது சிறுமி சீர்காழியில் மீட்பு!”.. மர்ம நபர்களை வலைவீசி தேடும் போலீசார்!
நவம்பர் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 20 முதல் மழையின் தீவிரம் குறையும்
நவம்பர் 20ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: பாம்பன் பாலத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய பகீர் சம்பவம்.. ஓடும் ரயிலில் இருந்து கடலில் குதித்த ஆண், பெண்.. கதிகலங்க வைக்கும் பின்னணி!
நவம்பர் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவம்பர் 16) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
நாளை (நவம்பர் 17) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.