பணத்தாசை யாரை விட்டது! 2014 முதல் 2024 வரை கூட்டுறவு வழங்கியில் நடந்த மோசடி.. நாகர்கோவிலிலில் போலீசிடம் சிக்கிய 4 பேர்!
Nagercoil Rs.17.15 Crore Fraud : நாகர்கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 10 ஆண்டுகளாக சிறுக சிறுக ரூ. 17.15 கோடி வரை மோசடி செய்த சம்பவத்தில் 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.17.15 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் செயலாளர் உள்பட 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஊட்டுவாழ்மடத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்த சங்கத்தில் கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் 2024- ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் விவசாயிகள் கடன், பயிர் கடன், சுய உதவி குழு கடன் ஆகியவை வழங்கியதில் பெரிய அளவில் முறைகேடு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சங்கத்தில், பொதுமக்கள் உங்கள் சேமிப்பு பணத்தை வைப்பு நிதியாக செலுத்தி உள்ளனர்.
ரூ.17.15 கோடி மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவில் புகார்
அதற்கான முதிர்வு தொகையை திரும்ப பெற முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அத்துடன், தமிழக அரசின் பயிர் கடன் தள்ளுபடி சலுகைகளும் தகுதியான விவசாயிகளுக்கு சென்றடையவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், டிஎஸ்பி பர்ணபாஸ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், சங்கத்தின் வரவு, செலவு ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
மேலும் படிக்க: மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு.. தேடப்பட்டு வந்த யூடியூபர் நிஷாந்த் கைது!
முன்னாள் செயலர் உள்பட 4 பேர் கைது
இதில், குறிப்பிட 10 நிதி ஆண்டுகளில் போலி ஆவணங்கள் மற்றும் கணக்குத் திருத்தங்கள் மூலமாக ரூ. 17.15 கோடிக்கு பணமோசடி செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்னாள் செயலாளர் தேவசாம் பால்ராஜ் ( 64 வயது), கடன் உதவி செயலாளர்கள் பூதலிங்கம் பிள்ளை ( 63 வயது), மற்றொரு உதவி செயலாளர், நடராஜ் ( 63 வயது), சங்கத்தின் எழுத்தர் விஜயகுமாரி ( 68 வயது) ஆகிய 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மோசடியில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா
அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், அவர்கள் நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்பது மற்றும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: செக்கானூரணி லாக்கப் மரணம்.. ஓட்டுநரை போலீசார் அடித்து கொன்றனரா? போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி தகவல்!