பைக் ஹாரன் அடித்ததை தட்டிக்கேட்ட நபருக்கு கத்திக்குத்து! பட்டினப்பாக்கத்தில் வீடு புகுந்து இளைஞர்கள் வெறிச்செயல்!
Chennai Crime: சென்னை பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த நீலகண்டன், கார் பராமரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தபோது, அந்த வழியாக வந்த சஞ்சய் என்பவர் பைக்கில் ஹாரன் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனை நீலகண்டன் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 16, 2026: சென்னையில் இருசக்கர வாகனத்தில் ஹாரன் அடித்ததைத் தட்டிக்கேட்ட நபரை, நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
ஹாரன் அடித்ததில் தொடங்கிய தகராறு
சென்னை பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த நீலகண்டன், கார் பராமரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தபோது, அந்த வழியாக வந்த சஞ்சய் என்பவர் பைக்கில் ஹாரன் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனை நீலகண்டன் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ரூ.100 கோடி முறைகேட்டில் புழல் சிறையில் அடைப்பு.. 3- ஆவது முறையாக உயிர் நண்பன் அன்பிலை சந்தித்த உதயநிதி.. என்ன காரணம்!
அப்போது நீலகண்டனையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக சஞ்சய் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நீலகண்டனின் குடும்பத்தினர் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மறுநாள் காலை விசாரணைக்கு அழைப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்!
இந்த நிலையில், இரவு சுமார் 11 மணியளவில் சஞ்சய், சந்தோஷ், ராகுல் உள்ளிட்ட நான்கு பேர் கத்திகளுடன் நீலகண்டனின் வீட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கிருந்த வீடுகளின் கதவுகளைத் தட்டி, குழந்தைகள் உட்பட யாரையும் விடமாட்டோம் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, வீட்டில் இருந்த நீலகண்டனை வெளியே அழைத்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
மேலும் படிக்க: மதுரை தனிஷ்க் கொள்ளை.. இன்ஸ்டா மீனாட்சி தாய்க்கு தொடர்பா? விசாரணையில் அதிரடி காட்டிய போலீசார்!
இந்தத் தாக்குதலில் நீலகண்டனின் முதுகு, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவரைக் காப்பாற்ற முயன்ற மேலும் இருவருக்கும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. படுகாயமடைந்த நீலகண்டன், ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே, கத்தியுடன் ஓடிவந்து நீலகண்டனைத் தாக்குவதும், தடுக்க முயன்றவர்களை நோக்கி ஆயுதத்தைச் சுழற்றுவதுமான அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
காவல்துறை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
இதுகுறித்து நீலகண்டனின் உறவினர்கள் கூறுகையில், சம்பவம் தொடர்பாக மாலையிலேயே காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளனர். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தத் தாக்குதலைத் தடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பட்டினப்பாக்கம் பகுதியில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அப்பகுதியில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.