தமிழகத்தில் காணாமல் போனவர்கள் குறித்து விவரம் என்ன? 3 வாரங்களில் பதிலளிக்க டிஜிபிக்கு உத்தரவு..
பல்வேறு மாநிலங்களில் காணாமல் போனவர்களைக் கண்டறிய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் நிலையில், தமிழகத்தில் அதுபோன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் உரிய தீவிரத்துடன் விசாரணை நடத்தப்படுவதில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
நவம்பர் 16, 2026: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த சங்கர் ராஜா என்பவர் மாயமான வழக்கில், தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளின் விவரங்களைத் தாக்கல் செய்ய காவல்துறை டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்து பிரச்சினையில் ஆட்கொணர்வு மனு
சொத்துப் பிரச்சினை காரணமாக தனது கணவர் சங்கர் ராஜாவை அவரது தந்தையும் சகோதரரும் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாகவும், அவரை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி அவரது மனைவி புவனேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்கர் ராஜாவைக் கண்டுபிடிக்கக் கோரி அவரது தந்தை ஏற்கனவே தொடர்ந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவரைக் கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: பெரியார் நூலகத்திற்கு போலி புத்தகங்கள் அச்சிட்டதாக புகார்.. மடிப்பாக்கம் அகல் விளக்கு பதிப்பகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு இந்த வழக்கில் உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், காணாமல் போனவர் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையைத் திருக்கோவிலூர் டிஎஸ்பி கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்ததும் நீதிபதிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதது ஏன்?
இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் காணாமல் போனவர்களைக் கண்டறிய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் நிலையில், தமிழகத்தில் அதுபோன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் உரிய தீவிரத்துடன் விசாரணை நடத்தப்படுவதில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும் படிக்க: ரூ.100 கோடி முறைகேட்டில் புழல் சிறையில் அடைப்பு.. 3- ஆவது முறையாக உயிர் நண்பன் அன்பிலை சந்தித்த உதயநிதி.. என்ன காரணம்!
3 வாரத்திற்குள் டிஜிபி பதிலளிக்க உத்தரவு
சங்கர் ராஜாவைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திருக்கோவிலூர் டிஎஸ்பிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர், எத்தனை வழக்குகளில் விசாரணை நிலுவையில் உள்ளது, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.
மேலும், நிலுவையில் உள்ள காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அறிக்கையில் விளக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.