AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“விரைவில் நமது ஆட்சி உதயமாகும்… திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் வரப்போகிறது” – திமுக நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Udhayanidhi Stalin On TVK Government: மனு அளிக்க வந்த நபரை துணை சபாநாயகர் தாக்கியதாகக் கூறப்படும் காணொளியையும், பெண் மாவட்ட ஆட்சியர் தொடர்பான சம்பவத்தையும் சுட்டிக்காட்டிப் பேசினார். இந்த விவகாரங்களை முதலில் மக்களிடம் எடுத்துச் சென்றவர் கனிமொழி என்று குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்காமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

“விரைவில் நமது ஆட்சி உதயமாகும்… திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் வரப்போகிறது” – திமுக நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Nov 2026 22:20 PM IST

நவம்பர் 16, 2026: திருச்சியில் நடைபெற்ற திமுக அமைச்சர் கே.என். நேருவின் குடும்பத் திருமண விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் உதயமாகும் என்றும், திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரப்போவதாகவும் பேசினார். மேலும், தற்போதைய ஆட்சியை கடுமையாக விமர்சித்த அவர், தமிழகத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

 “நேரு என்றாலே மாநாடுதான்”

திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என். நேருவை புகழ்ந்து பேசினார். திருச்சி மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக உருவாக்குவதற்குத் தொடர்ந்து பாடுபட்டு வருபவர் நேரு என்றும், கட்சியின் மாநாடுகளை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் வகையில் நடத்திக் காட்டியவர் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: “தமிழக வெற்றிக் கழக ஆட்சி கலப்பட ஆட்சி.. சூரசம்ஹாரமே சாட்சி!” – முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்!

ஒரு மாநாட்டை நடத்துவதற்கும், அதை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக மாற்றுவதற்கும் நேருவுக்கு மட்டுமே தகுதி இருப்பதாகக் கூறிய அவர், “மாநாடு என்றால் நேரு என்று கூறுவார்கள். ஆனால், நேரு என்றாலே மாநாடுதான்” என்று புகழாரம் சூட்டினார்.

 “சட்டப்படி போராடி வெற்றி பெறுவார் நேரு”

நேரு பல்வேறு சாதனைகளைப் படைத்திருந்தாலும், அதே நேரத்தில் பல சோதனைகளையும் சந்தித்து வருவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். நேருவின் சகோதரர் ராமஜெயம் உயிரிழந்தபோது, நேருவும் திமுகவினரும் எவ்வளவு வேதனை அடைந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.

தற்போது அவர் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் மற்றும் வேதனைகளைக் கண்டு துவண்டுவிடாமல், சட்டப்படி நீதிமன்றத்தை அணுகி வெற்றி பெறுவேன் என்ற உறுதியுடன் நேரு செயல்பட்டு வருவதாகவும் உதயநிதி கூறினார்.

“திருச்சி கிழக்கில் விரைவில் இடைத்தேர்தல்”

தொடர்ந்து தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், “விரைவில் நம்முடைய ஆட்சி உதயமாகப் போகிறது. நேரு அவர்கள் தற்போது அமைச்சராக இருக்கிறார். நானும் மக்கள் மனதில் முதலமைச்சராக இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். இதைச் சொல்லவே எனக்கு வெட்கமாகவும் கூச்சமாகவும் இருக்கிறது. ஏனென்றால் தற்போது கேடுகெட்ட ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று விமர்சித்தார்.

மேலும் படிக்க: உருவானது அக்வான் புயல்.. தமிழகத்திற்கு கனமழை வாய்ப்பு குறைகிறதா? ஆந்திரா நோக்கி நகரும் புயல்

மேலும், திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வரப்போவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த ஆறு மாதங்களாக அங்கு ஆட்சி நடைபெறவில்லை என்றும், வெறும் காட்சிதான் நடைபெற்று வருவதாகவும் விமர்சித்தார். மாற்றம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விமர்சனம்

தமிழகத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களும், பாலியல் வன்கொடுமைகளும் நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டிய உதயநிதி, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் விமர்சித்தார்.

மனு அளிக்க வந்த நபரை துணை சபாநாயகர் தாக்கியதாகக் கூறப்படும் காணொளியையும், பெண் மாவட்ட ஆட்சியர் தொடர்பான சம்பவத்தையும் சுட்டிக்காட்டிப் பேசினார். இந்த விவகாரங்களை முதலில் மக்களிடம் எடுத்துச் சென்றவர் கனிமொழி என்று குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்காமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட விரைவில் நல்லதொரு அரசியல் சூழல் உருவாகும் என்றும் தெரிவித்தார். இறுதியாக, பாவேந்தர் பாரதிதாசன் கூறியதைப் போல, தொண்டர்கள் தங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் விளக்காக இருந்து கட்சிப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Follow Us