விமான எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்த தமிழக அரசு – விமான கட்டணம் குறையுமா?
Tamil Nadu Government Cuts VAT : சென்னை விமான நிலையத்தில், திட்டமிடப்பட்ட விமானச் சேவை நிறுவனங்களின் விமானங்களுக்கு விற்கப்படும் எரிபொருளுக்கு இதுவரை 29 சதவீத வாட் வரி விதிக்கப்பட்டு வந்தது. இதனை தமிழக அரசு தற்போது 16 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்டோபர் 23 : தமிழகத்தில் விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்தி, விமானச் சேவைகளை ஊக்குவிக்கும் நோக்கில், விமான எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை தமிழக அரசு கணிசமாகக் குறைத்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் (Chennai Airport) இந்த வரி 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகவும், மாநிலத்தின் பிற விமான நிலையங்களில் 1 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 13 சதவீதப் புள்ளிகள் குறைப்பு
சென்னை விமான நிலையத்தில், திட்டமிடப்பட்ட விமானச் சேவை நிறுவனங்களின் விமானங்களுக்கு விற்கப்படும் எரிபொருளுக்கு இதுவரை 29 சதவீத வாட் வரி விதிக்கப்பட்டு வந்தது. இது தற்போது 16 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 13 சதவீதப் புள்ளிகள் அளவுக்கு வரி குறைந்துள்ளது.
இதையும் படிக்க : பழனி பஞ்சாமிர்தத்துக்கு வாழைப்பழம் வழங்க டெண்டர்: ரூ.1 கோடி வைப்புத் தொகை – வெளியான அறிவிப்பு




சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் பிற விமான நிலையங்களில், திட்டமிடப்பட்ட விமானச் சேவை நிறுவனங்களுக்கான எரிபொருள் வரி 29 சதவீதத்திலிருந்து வெறும் 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி போன்ற நகரங்களிலிருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும். இதன் மூலம், சென்னையைத் தாண்டி மற்ற நகரங்களுக்கும் சேவைகளை விரிவுபடுத்த விமான நிறுவனங்களுக்கு ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய ரக விமானங்களுக்கும் வரிக் குறைப்பு
அதிகபட்சப் புறப்பாட்டு எடை 40,000 கிலோவுக்கு குறைவாக உள்ள திட்டமிடப்பட்ட விமானங்களுக்கு, பிற விமான நிலையங்களில் இதுவரை 5 சதவீதமாக இருந்த வரி, தற்போது 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறிய ரக விமானங்கள் இந்தப் பிரிவின் கீழ் வரும்.
இந்த வரிக் குறைப்பு 2026 நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 2027 அக்டோபர் 31 ஆம் தேதி வரை, அதாவது ஓராண்டு காலத்துக்கு இது நடைமுறையில் இருக்கும்.
தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் 2026 அக்டோபர் 23 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த வரிச் சலுகையைப் பெற விரும்பும் விமான நிறுவனங்கள், அதற்கான அறிவிப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தங்களின் மாதாந்திர வரிக் கணக்குடன் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகளுக்குப் பலன் கிடைக்குமா?
விமான நிறுவனங்களின் இயக்கச் செலவில் எரிபொருள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த வரிக் குறைப்பின் பலன், டிக்கெட் கட்டணக் குறைப்பாகப் பயணிகளுக்குச் சென்றடையுமா என்பது விமான நிறுவனங்களின் முடிவைப் பொறுத்தே அமையும்.
இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: நெல்லை, கன்னியாகுமரிக்கு இன்று ரெட் அலர்ட்: இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை
இதற்கிடையே சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம், பராமரிப்பு போன்ற பணிகளை பொது – தனியார் பங்களிப்பு மாதிரியின் கீழ் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நாட்டின் முக்கிய பெருநகர விமான நிலையங்கள் ஏற்கனவே தனியார் நிறுவனங்களால் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையிலும் இந்த அதிரடி மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.