வரலாறு படைத்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ: ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் விண்ணப்பங்கள்
Jio IPO : ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ), இந்தியப் பங்கு சந்தை வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த வெளியீட்டுக்கு ரூ. 7 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் பங்குகள் கோரப்பட்டுள்ளன.
ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ), இந்தியப் பங்கு சந்தை வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த வெளியீட்டுக்கு ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் பங்குகள் கோரப்பட்டுள்ளன. 1.38 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்ததன் மூலம், உலகிலேயே அதிகப் பங்கேற்பாளர்களைக் கொண்ட ஐபிஓ என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.
655 கோடி பங்குகளுக்கான விண்ணப்பங்கள்
நிறுவனம் புதிதாக வெளியிட்ட 27 கோடி பங்குகளுக்கு, மொத்தம் 655.68 கோடி பங்குகள் கேட்டு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான பிரிவு 30 மடங்குக்கும் மேல் விண்ணப்பங்களைப் பெற்ற நிலையில், மூன்றாவது நாள் முடிவில் ஐபிஓ பிரிவுக்கு 22.2 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
பிரிவு வாரியான நிலவரம்
- தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் (QIB): 70.55 மடங்கு
- நிறுவனம் சாராத முதலீட்டாளர்கள் (NII): 14 மடங்கு
- பங்குதாரர்கள் பிரிவு: 7.6 மடங்கு
- ஊழியர்கள் பிரிவு: 2.93 மடங்கு
- சில்லறை முதலீட்டாளர்கள்: 2.72 மடங்கு
குறிப்பாக, தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவுக்கு 70 மடங்குக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்திருப்பது, பெரு முதலீட்டாளர்களிடையே இந்தப் பங்குக்கு உள்ள வரவேற்பைக் காட்டுகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய ஐபிஓ
மேலும் ரூ.30,213 கோடி மதிப்பிலான இந்த வெளியீடு, இந்திய முதலீட்டுச் சந்தை வரலாற்றிலேயே மிகப் பெரிய ஐபிஓ ஆகும். இது முழுக்க முழுக்கப் புதிய பங்கு வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, திரட்டப்படும் முழுத் தொகையும் நிறுவனத்துக்கே செல்லும். ஏற்கெனவே உள்ள பங்குதாரர்கள், தங்களிடம் உள்ள ஒரு பங்கைக் கூட விற்க முன்வரவில்லை.