குடிபோதையில் ஏற முயன்ற நபரின் முகத்தில் செருப்பு காலால் எட்டி உதைத்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்.. பொதுமக்கள் கொந்தளிப்பு!
Kangeyam Bus Stand Incident: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையத்தில், குடிபோதையில் அரசு பேருந்தில் ஏற முயன்ற நபரை ஓட்டுநரும் நடத்துனரும் செருப்பு காலால் முகத்தில் எட்டி உதைத்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்திற்குப் பொதுமக்களிடையே கடும் கண்டனம் எழுந்துள்ளது.
திருப்பூர், அக்.22: திருப்பூர் மாவட்டத்தின் மிக முக்கிய வணிக மற்றும் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக விளங்கும் காங்கேயம் நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் சுற்றியுள்ள ஊர்களுக்குப் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட டவுன் பேருந்துகளும், 100-க்கும் மேற்பட்ட தொலைதூரப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருவதுடன், ஒவ்வொரு நாளும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இப்பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக இயங்கும் இத்தகைய பொது இடங்களிலும், அரசுப் போக்குவரத்துத் துறையிலும் பணிபுரியும் ஊழியர்கள் பொதுமக்களிடம் கனிவாகவும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும் எனப் போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. ஆனால், இதுபோன்ற நன்னடத்தை விதிகளுக்கு மாறாகப் போக்குவரத்து ஊழியர்கள் சிலரின் வரம்பு மீறிய செயல்கள் அவ்வப்போது அரங்கேறி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன.
ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் தாக்குதல்:
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கேயத்தில் இருந்து சென்னிமலை நோக்கிச் செல்லும் 1-பி (1B) அரசு டவுன் பேருந்து இயக்கப்படுவதற்காகத் தயாராக நின்றுகொண்டிருந்தது. அப்போது, குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் அந்தப் பேருந்தில் ஏற முயன்றதாகக் கூறப்படுகிறது. நிலை தடுமாறிய அந்த நபரைப் பேருந்தில் அனுமதிக்க மறுத்திருக்க வேண்டும் அல்லது காவல்துறையினரிடமோ அல்லது பேருந்து நிலைய அதிகாரிகளிடமோ முறையான முறையில் தகவல் தெரிவித்து அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், எவ்வித மனிதநேயமும் இன்றி ஆத்திரமடைந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநரும் நடத்துனரும் இணைந்து, அந்த நபரைப் பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்முன்னே செருப்புக் காலால் அந்த நபரின் முகத்திலேயே ஓங்கி எட்டி உதைத்த அநாகரிகமான செயல் அங்கிருந்தவர்களைப் பதைபதைக்க வைத்துள்ளது.
பயணி முகத்தில் காலால் எட்டி உதைத்த அரசுப் பேருந்து ஊழியர்கள்!
சதய விழா: 1041 மாணவிகளின் பிரம்மாண்ட பரதநாட்டிய புஷ்பாஞ்சலி!
வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளைப் பந்தாடிய காட்டெருமை வீடியோ!
தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும் கனமழை!
