தங்கம் உட்பட ஹாட்ரிக் பதக்கம்: ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்!
Asian Para Games 2026 : ஜப்பானில் நடைபெற்று வரும் 5வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் (Thulasimathi Murugesan) ஒரு தங்கம், இரண்டு வெள்ளி என 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை, அக்டோபர் 23 : ஜப்பானில் நடைபெற்று வரும் 5வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் (Thulasimathi Murugesan) ஒரு தங்கம், இரண்டு வெள்ளி என 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து அவருக்கு தமிழக அரசின் ரூ.1.75 கோடி ஊக்கத் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மூன்று பிரிவுகளில் 3 பதக்கங்கள்
ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் 2026 அக்டோபர் 18 ஆம் தேதி பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கின. இதில் களமிறங்கிய துளசிமதி முருகேசன், மகளிர் ஒற்றையர், கலப்பு இரட்டையர் ஆகிய இரு பிரிவுகளிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதைத் தொடர்ந்து, மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றி, ஒரே போட்டித் தொடரில் ஹாட்ரிக் பதக்கம் வென்ற பெருமையைப் பெற்றார்.
இதையும் படிக்க : பத்மநாபசாமி முதல் ராமேஸ்வரம் வரை! குறைந்த செலவில் சுற்றுலா செல்லலாம் வாங்க!




முதல்வர் விஜய் வாழ்த்து
முன்னதாக பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை துளசிமதி முருகேசன் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். மேலும் அவர் தனது பதிவில், நமது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் இச்சாதனைகளை படைத்துள்ளதோடு, தமிழ்நாட்டின் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளதாக பாராட்டியிருந்தார்.
இந்த நிலைில் அக்டோபர் 23, 2026 இன்று காலை அவர் வென்ற முதல் வெள்ளிப் பதக்கத்துக்காக, தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது வெள்ளி, தங்கப் பதக்கங்களுக்கான ஊக்கத்தொகை இனிமேல்தான் அறிவிக்கப்பட உள்ளது.
வெள்ளிப் பதக்கத்துக்கு ரூ.50 லட்சம் என்ற அடிப்படையில், இரண்டு வெள்ளிக்கும் சேர்த்து ரூ.1 கோடியும், தங்கப் பதக்கத்துக்கு ரூ.75 லட்சமும் வழங்கப்பட்டால், துளசிமதிக்கு மொத்தம் ரூ.1.75 கோடி ஊக்கத்தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
தடைகளைத் தாண்டிய சாதனை
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி, பிறவியிலேயே இடது கையில் குறைபாட்டுடன் பிறந்தவர். இதனால் அவரது கையில் சுமார் 30 சதவீத அளவுக்கு நெகிழ்வுத்தன்மையும் இயக்கமும் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தச் சவாலைக் கடந்து, சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காகத் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகிறார். 2024 பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகளில், பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டின் கவனத்தை ஈர்த்தார்.
இதையும் படிக்க : ரூ.5 கோடி லஞ்ச புகார்.. ஆய்வாளர் கைது சட்டத்துக்கு புறம்பானது.. உடனே விடுவிக்க வேண்டும்.. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழக வீரர்களின் பதக்க வேட்டை
இதே போட்டிகளில், தமிழகத்தைச் சேர்ந்த சிவராஜன் சோலைமலை ஆண்கள் இரட்டையரில் வெள்ளியும், மனிஷா ராமதாஸ் பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவில் வெண்கலமும் வென்றுள்ளனர். பாரா பேட்மிண்டனில் தமிழக வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருவது பெருமைக்குரியதாக அமைந்துள்ளது. துளசிமதியின் சாதனைக்குச் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.