கோவையில் மாணவன் தற்கொலை விவகாரம்.. பள்ளி தலைமை ஆசியர் உள்பட இருவர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை!
Coimbatore 2 Teachers Suspend : கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர், பீளமேடு ஏ. டி. காலனியில் வசித்து வருபவர் அசோக் குமார். இவரது மகன் அகிலன் ( 16 வயது). இவர், பீளமேட்டில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் கே.கே. நாயுடு மேல்நிலைப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரை சக மாணவர்கள் ஜாதி பெயரை கூறி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதில், விரக்தி அடைந்த மாணவன் அகிலன் பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக, பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர்- வகுப்பு ஆசிரியர் சஸ்பெண்ட்
இந்த நிலையில் தலைமையாசிரியர் அருண்குமார் மற்றும் ஆசிரியர் விஜயகுமார் ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம், கோவை மாநகர காவல் ஆணையர் ரம்யா பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதில், காவல்துறை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வெளுத்து வாங்கிய கனமழை.. வீட்டின் சுவர் விழுந்து தாய்- மகள் பரிதாப பலி.. விருதுநகரில் சோக சம்பவம்!




மாணவன் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு உறவினர்கள் போராட்டம்
முன்னதாக, மாணவர் அகிலன் உயிரிழப்புக்கு காரணமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீளமேடு காவல் நிலையம் முன்பு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவர் தற்கொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
வகுப்பு ஆசிரியர் கைது, தலைமை ஆசிரியரிடம் விசாரணை
இதை தொடர்ந்து, கே. கே. நாயுடு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அருண்குமார் ( 43 வயது) அகிலன் பயின்ற வகுப்பின் ஆசிரியர் விஜயகுமார் ( 42 வயது) மற்றும் 2 மாணவர்கள் என 4 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், ஆசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமை ஆசிரியர் அருண்குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: தூத்துக்குடியில் பரபர சம்பவம்.. வீடு புகுந்து அரிவாள் தாக்குதல்.. கணவன்- மனைவி கொடூர கொலை.. கைதான நபர் பகீர் வாக்குமூலம்!