இலங்கை தமிழர் முகாமில் விழுந்த இடி.. தூங்கிய தொழிலாளி பரிதாப பலி.. தூத்துக்குடியில் பெரும் சோகம்!
Thoothukudi Worker Dies : தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் குடிசை வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது இடி தாக்கியதில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின்போது, இடி தாக்கியதில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தூங்கிக் கொண்டிருந்தவர் பரிதாபமாக உள்ளார். தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே உள்ள தாப்பாத்தியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு, புதிதாக வீடுகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இங்கு புதூர் அருந்ததியர் காலனியில் வசித்து வரும் பால்பாண்டி என்பவரது மகன் முனியசாமி ( 24 வயது) உள்ளிட்ட பல்வேறு கட்டிட தொழிலாளர்கள் அங்கு வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், வழக்கம் போல இவர்கள் கட்டிட பணிக்கு சென்ற நிலையில் மாலையில் வேலை முடிந்து அனைவரும் இலங்கை தமிழர்கள் முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஓலை குடிசையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.
தூங்கிய தொழிலாளர்கள் மீது இடி தாக்குதல்
அப்போது, இரவு சுமார் 10 மணி அளவில் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில், இடி மற்றும் மின்னல் பலமாக வெட்டியது. இதில், ஒரு இடி கட்டிட தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசையின் மீது விழுந்தது. இதில், குடிசையில் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி முனியசாமி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதேபோல, அவருடன் தூங்கிக் கொண்டிருந்த சக தொழிலாளியான மாரிமுத்து ( 34 வயது), சுனில் ( 45 வயது) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.
மேலும் படிக்க: குலசேகரன்பட்டினத்தில் கொடூரம்.. முத்தாரம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர் கொலை.. தந்தை-மகன்கள் வெறிச்செயல்!




ஒரு தொழிலாளி பலி- இருவருக்கு சிகிச்சை
அப்போது, அவரது சத்தம் கேட்டு அருகில் படுத்திருந்த சக தொழிலாளர்கள் உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற இரு தொழிலாளர்களும் இயல்பான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, உயிரிழந்த தொழிலாளி முனியசாமியின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.
போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை
இடி தாக்கியதில் கட்டிட தொழிலாளி முனியசாமிக்கு வயிறு, வலது தொடை மற்றும் வலது விலா எலும்பு ஆகிய பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிட வேலைக்கு வந்திருந்த தொழிலாளர்கள் மீது இடி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு.. சென்னையில் திமுக பிரமுகர் அதிரடி கைது.. பரபரப்பில் கட்சியினர்!