ரூ.5 கோடி லஞ்ச புகார்.. ஆய்வாளர் கைது சட்டத்துக்கு புறம்பானது.. உடனே விடுவிக்க வேண்டும்.. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Rs. 5 Crore Bribery Case Inspector Arrested : தஞ்சாவூரில் ரூ. 5 கோடி லஞ்சம் பெற்றதாக மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனையின் பங்குதாரர்கள் இடையே உரிமைப் பிரச்சினை ஏற்பட்டதுது இரு தரப்பினரும் மருத்துவக் கல்லூரி காவல் நிலையம் மற்றும் மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், மருத்துவமனையின் நிர்வாக தலைவர் ஆர். எம். பாஸ்கரன், எஸ்சி., எஸ்டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். இதில், உள்நோக்கம் இருப்பதாகவும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பதாகவும், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டிஜிபியிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கு சிபிசிஐடி- க்கு மாற்றப்பட்டு போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில், காவல் ஆய்வாளர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகவும் சரவணன் குற்றம் சாட்டினார்.
தஞ்சாவூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கைது- சஸ்பெண்ட்
இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாரன் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், அவரை கைது செய்தனர். அப்போது, அவர் நெஞ்சு வலிப்பதாக கூறிய நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். குற்றவியல் நீதித்துறை நடுவர் நேரில் சென்று விசாரணை நடத்திய நிலையில், அவரை ஆவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, ஆய்வால் சுகுமாரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
மேலும் படிக்க: வெளுத்து வாங்கிய கனமழை.. வீட்டின் சுவர் விழுந்து தாய்- மகள் பரிதாப பலி.. விருதுநகரில் சோக சம்பவம்!




காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி திருவையாறு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆய்வாளர் சுகுமாரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆக்னஸ் ஜெபகிருபா தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதனால், மருத்துவமனையில் இருந்த ஆய்வாளர் சுகுமாரன் தஞ்சாவூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, புதன்கிழமை திருவையாறு நீதிமன்றத்தில் சுகுமார் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அவரிடம் விசாரணை நடத்துவதற்கு காவல்துறைக்கு ஒரு நாள் அனுமதி வழங்கப்பட்டது.
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில், காவல் ஆய்வாளர் சுகுமாரனை விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று வெள்ளிக்கிழமை திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்துடன், காவல் ஆய்வாளரை கைது செய்தது சட்டவிரோதம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டதற்கான காரணம் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகளை தனியே விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, சிறையில் இருந்து ஆய்வாளர் சுகுமாரன் விடுவிக்கப்பட்டார்.
மேலும் படிக்க: இலங்கை தமிழர் முகாமில் விழுந்த இடி.. தூங்கிய தொழிலாளி பரிதாப பலி.. தூத்துக்குடியில் பெரும் சோகம்!