அன்று அன்னியன், இன்று அம்பி – முதல்வர் விஜய் பேச்சை விமர்சித்து பாஜக பதிவு..
தேர்தலுக்கு முன்பு சட்டம் - ஒழுங்கு குறித்து முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளையும், தற்போது சட்டப்பேரவையில் அவர் தெரிவித்த கருத்துகளையும் ஒப்பிட்டு தமிழக பாஜக சமூக வலைதளத்தில் விமர்சனம் வெளியிட்டுள்ளது. அதில், தேர்தலுக்கு முன்பு, “சட்டம் - ஒழுங்கு காணாமல் போய் ரொம்ப நாளாச்சு.” என விஜய் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 8, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் செப்டம்பர் 7ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆற்றிய பதிலுரையை, அந்நியன் திரைப்படத்தில் இடம்பெறும் அந்நியன் மற்றும் அம்பி கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு தமிழக பாஜக விமர்சித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பதிலுரை ஆற்றிய முதலமைச்சர் விஜய், திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல்வேறு விமர்சனங்களை தெரிவித்தார்.
தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை:
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, சட்டம் – ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சமீபத்தில் சென்னையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும் படிக்க: பஜ்ஜி சாப்பிட்ட சிறுமி மயங்கி விழுந்து பலி.. திருவள்ளூரில் சோக சம்பவம்!
பேரவையில் உரையாற்றிய முதல்வர் விஜய்:
இந்த நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், ஒரு குற்றச் சம்பவம் நடைபெற்றதற்காக மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் கூற முடியாது என தெரிவித்தார். தனிப்பட்ட குற்றச் சம்பவத்திற்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் – ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், குற்றச் செயல்களில் இளைஞர்கள் ஈடுபடும் சூழல் உருவாகியிருப்பதற்கு காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
அன்று அன்னியன் இன்று அம்பி – பாஜக விமர்சனம்:
அன்று “அந்நியன்”, இன்று “அம்பி”
என்ன ப்ரோ இது ரொம்ப தப்பு ப்ரோ! @TVKVijayHQ pic.twitter.com/Kau07cKuki— BJP Tamilnadu (@BJP4TamilNadu) September 7, 2026
இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு சட்டம் – ஒழுங்கு குறித்து முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளையும், தற்போது சட்டப்பேரவையில் அவர் தெரிவித்த கருத்துகளையும் ஒப்பிட்டு தமிழக பாஜக சமூக வலைதளத்தில் விமர்சனம் வெளியிட்டுள்ளது. அதில், தேர்தலுக்கு முன்பு, “சட்டம் – ஒழுங்கு காணாமல் போய் ரொம்ப நாளாச்சு. சட்டம் – ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. இதற்கெல்லாம் இந்த ஊழல் கபடதாரிகள் அரசுதான் காரணம்” என விஜய் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், “இவன் வேற, இந்த விஜய் வேற” என குறிப்பிடும் வகையில், தேர்தலுக்கு முன்பு அவர் பேசிய மற்றொரு கருத்தையும் பாஜக சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தலுக்கு முன் – பின் பேசிய கருத்துக்கள்:
ஆனால், தற்போது சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், “ஒரு குற்றம் நடைபெற்ற பிறகு, அதனை அரசின் மீது சுமத்திவிட்டு மற்றவர்கள் ஒதுங்கிவிட முடியாது” என தெரிவித்ததாக பாஜக குறிப்பிட்டுள்ளது. மேலும், “ஒவ்வொரு குற்றத்திற்கும் பின்னாலும் குடும்பப் பிரச்சினை, சொத்துத் தகராறு, முன்விரோதம் அல்லது போதைப்பொருள் பயன்பாட்டின் தாக்கம் இருக்கலாம்” என முதலமைச்சர் விஜய் பேசியதையும் பாஜக சுட்டிக்காட்டியுள்ளது.
முதலமைச்சர் விஜயின் தேர்தலுக்கு முந்தைய பேச்சையும், தற்போது சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளையும் அந்நியன் திரைப்படத்தின் அந்நியன் மற்றும் அம்பி கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு தமிழக பாஜக வெளியிட்டுள்ள இந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.