தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 20-ஆம் தேதி வரை நடைபெறும்… சபாநாயகர் மு. அப்பாவு அறிவிப்பு!
Tamil Nadu Assembly Session: தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் நிதியமைச்சரின் பதிலுரைக்காக வரும் 20- ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறுவதாக சபாநாயகர் மு. அப்பாவு தெரிவித்தார்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை ( பிப்ரவரி 17) தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரில், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து, அதில் உள்ள அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வேளாண் வரவு, செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். இதில், மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித் தொகை, மகளிர் விடியல் பேருந்து, நியோ டைடல் பூங்காக்கள் அமைப்பது என்பன உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.
அலுவல் ஆய்வுக் கூட்டம்
இது தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026- 2027 ஆம் ஆண்டுக்கான இடைநிலை நிதிநிலை அறிக்கையை நிதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து வேளாண் துறையின் வரவு, செலவு அறிக்கையை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசியிருந்தார். பின்னர், எனது தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.




பிப்.20-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்ட தொடர்
இந்தக் கூட்டத்தில் வருகிற பிப்ரவரி 20-ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை ) வரை சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில், நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் வியாழக்கிழமை) இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் வரவு, செலவு திட்டம் மீதான விவாதம் நடைபெறும். இந்த இரு நாட்களில் கேள்வி, பதில்கள் கேட்பதற்கான நேரம் ஒதுக்கப்படும். பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியாக பிப்ரவரி 20- ஆம் தேதி நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் உரையாற்றுவார்
மானிய கோரிக்கைகள் விவாதம் இன்றி நிறைவேற்றப்படும்
மேலும், முன் பண கோரிக்கைகள், 2025- 2026 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கைகள் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு விவாதம் இன்றி நிறைவேற்றி வழங்கப்படும். சட்டமன்ற தொடர் தொடங்கும் போது கவர்னர் அவருக்கான உரையை வாசிப்பதும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் மரபாகும். சட்டப் பேரவையில் நடைபெறும் விவாதம், முதலமைச்சர் பதிலளித்து பேசுவது உள்ளிட்டவை நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கூட்டத் தொடரில் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதை நீக்கம் செய்வது கிடையாது. அது தவறான செயலாகும் என்று கூறினார்.
மேலும் படிக்க: இடைக்கால பட்ஜெட் 2026 – தூய்மை பணியாளர்களுக்கு 33,000 வீடுகள்… ஐடி பார்க்.. பட்ஜெட்டில் ஸ்பெஷல் அறிவிப்புகள் எவை?