கிராமங்களுக்கு இன்டர்நெட்.. தகவல் தொழில்நுட்பத்தில் அசத்தல் அறிவிப்புகள்…
TN interim budget 2026: ஆண்டுதோறும் 2.5 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதியுடன், மாநிலம் முழுவதும் பல இலட்சம் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கி வரும் பெரும் துறையாக தகவல் தொழில்நுட்பத்துறை திகழ்கிறது.
சென்னை, பிப்ரவரி 17: தமிழக சட்டப்பேரைவையில் இன்று தனது இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட இருக்கிறது. ஆகவே, இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.
கிராமங்களுக்கு இன்டர்நெட்:
தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் கண்ணாடி இழை கம்பிவடம் (Optical fibre) மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டப் பணிகள், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் (TANFINET) மூலம், தற்போது 11,953 (95%) கிராம ஊராட்சிகளில் முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக முதல்வர், கடந்த அக்டோபர் மாதம் 10,000 கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் இணையவழியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம்:
தகவல் தொழில்நுட்பத் துறையில், தமிழ்நாடு பரவலான வளர்ச்சி பெறுவதை அரசு உறுதி செய்து வருகிறது. ஆண்டுதோறும் 2.5 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதியுடன், மாநிலம் முழுவதும் பல இலட்சம் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கி வரும் பெரும் துறையாக தகவல் தொழில்நுட்பத்துறை திகழ்கிறது. 250க்கும் மேற்பட்ட ‘உலகளாவிய திறன் மையங்கள்’ (GCCs) இயங்கி வரும் சென்னையில், இந்தியாவின் முன்னணி மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள நிலையில், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களும் இந்த வளர்ச்சி வேகத்திற்கு வலுவாகப் பங்களித்து வருகின்றன.
மாநிலமெங்கும் பரவலாக வேலைவாய்ப்பு:
இந்திய அரசின் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் (STPI) நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில், 32 மாவட்டங்களிலிருந்து தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி பதிவாகியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை மாநிலமெங்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பரவலான வளர்ச்சியைப் பெற்றுள்ளது தெளிவாக வெளிப்படுகிறது.
புத்தொழில் நிறுவனங்களுக்கான வசதிகள்:
தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் (iTNT Hub) சார்பில், 174 ஆழ்நிலை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், புத்தொழில்கள் வழியாகப் புத்தாக்கம் மற்றும் அனைவருக்குமான வளர்ச்சியை ஊக்குவித்திட, 27 ஆழ்நிலை தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் தொழில் வளர்காப்பகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.