கந்த சஷ்டி விழா – திருச்செந்தூருக்கு 2 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
Kanda Sashti Special Trains : திருச்செந்தூரில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடடப்பட்டு வருகிறது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில் 2 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
தூத்துக்குடி, நவம்பர் 12 : கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில் 2 சிறப்பு ரயில்களை (Special Train) அறிவித்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடடப்பட்டு வருகிறது.
12 நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழா
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழா நவம்பர் 10, 2026 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : நடுரோட்டில் முதியவர் வெட்டி படுகொலை.. அரக்கோணத்தில் பெரும் பரபரப்பு.. 7 பேர் கும்பல் அதிரடி கைது!



அதனைத் தொடர்ந்து 2 ஆம் நாளான நவம்பர் 11, 2026 நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். விழா நாள்களில் தினந்தோறும் கலையரங்கில் பக்தி செற்பொழிவு நடைபெறுகிறது.
அந்த வகையில் கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 6 ஆம் நாளான நவம்பர் 15, 2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து 7 ஆம் நாள் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 8 ஆம் நாள் இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் பட்டினப்பிரவேசம் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து 9 ஆம் நாள் முதல் 11 ஆம் நாள் வரையிலும் தினமும் மாலை 6 மணி அளவில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி மற்றும் அம்பாள் ஊஞ்சல் காட்சி நடைபெறும். கடைசியாக 12 ஆம் நாள் திருநாளான நவம்பர் 21, 2026 அன்று மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டுதலுக்கு பின்னர் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து கோவில் சேருகிறார்கள்.
கந்த சஷ்டி நாட்களில் விரதம் இருந்து முருகனை பக்தர்கள் வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கந்த சஷ்டி விரதம் என்பது உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பது மட்டுமல்லாமல், மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் மற்றும் எதிர்மறை குணங்களை அகற்றுவதற்கான ஆன்மிகப் பயிற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன.. முதல்வர் விஜய் என்ன பேசினார்.. முழு விவரம்!
திருச்செந்தூருக்கு 2 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
இதற்கிடையில் கந்த சஷ்டி விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் நவம்பர் 15, 2026 அன்று முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து பகல் 3.20க்கு புறப்படும் ரயில் மாலை 5 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். அதேபோல, திருச்செந்தூரில் இருந்து இரவு 7.30க்கு புறப்பட்டு இரவு 8.50-க்கு நெல்லை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.