“சர்ச்சைகளில் சிக்கிய 2 தவெக எம்.எல்.ஏக்கள்!”.. தனியாக அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்த முதல்வர் விஜய்!!
CM Vijay Issues Warning: மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், சர்ச்சைகளில் சிக்கிய இரண்டு எம்.எல்.ஏக்களைத் தனியாக அழைத்து முதலமைச்சர் விஜய் கடுமையாக எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்து பேசிய முதல்வர், பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், குழு வாரியாகவும் (பெண் சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிவாரியாக சட்டமன்ற உறுப்பினர்கள் என) சந்தித்துப் பேசியுள்ளார்.
சென்னை, நவ.12: தமிழக அரசியல் களத்தில் பல்வேறு அதிரடி திருப்பங்களை ஏற்படுத்திய தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் நேற்றைய தினம் மிகவும் ரகசியமான முறையில் நடைபெற்றது. முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சுமார் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த முக்கியக் கூட்டத்தில், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தயாரிப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்களுடனும் பொதுவான ஆலோசனைகள் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் மாவட்ட வாரியாக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடந்ததாகவும், இறுதியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய குறிப்பிட்ட இரண்டு எம்.எல்.ஏக்களை மட்டும் தனியாக அழைத்து முதல்வர் விசாரித்த நிகழ்வு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது ரூ.3.35 கோடி மோசடி புகார்.. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு!
சர்ச்சைகளில் சிக்கிய 2 எம்எல்ஏக்கள்:
சமீப காலமாகத் தவெக கட்சியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் பொதுவெளியிலும் ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறி இருந்தன. குறிப்பாக, மனு அளிக்க வந்த பொதுமக்களைத் தாக்கியதாக துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் மீதும், பெண் மாவட்ட ஆட்சியருக்குத் தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதும் தீவிரமான புகார்கள் எழுந்து எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இத்தகைய புகார்கள் கட்சியின் நற்பெயருக்கு எந்தளவுக்குக் களங்கம் விளைவித்துள்ளன என்பதை உணர்ந்த முதல்வர் விஜய், இந்தக் கூட்டத்தின் வாயிலாக நேரடியாகச் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
முதலமைச்சரின் கடுமையான எச்சரிக்கை:
பொதுவான ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் குழு வாரியான விவாதங்கள் நிறைவடைந்த பிறகு, சர்ச்சையில் சிக்கிய அந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் தனியாக அழைத்து சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை முதல்வர் ஜோசப் விஜய் தீவிரமாகக் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து விரிவான விளக்கத்தைக் கேட்டறிந்த அவர், கட்சியின் கொள்கைகளுக்கு மாறாகவும் மக்களுக்கு எதிராகவும் செயல்படுவதை எக்காலத்திலும் சகித்துக்கொள்ள முடியாது என்று கடுமையாக எச்சரித்தார். “இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேலும் தொடரக் கூடாது; புகார்கள் மீது தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் என்றும், இந்த விசாரணையின் போது நடந்தவற்றைச் சரியாகக் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்களது பணிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அந்த அடிப்படையில் புகார் நிரூபிக்கப்பட்டால் உரிய மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கண்சிவக்கக் கூறியதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.25 லட்சம் வழங்கி தமிழக அரசு உத்தரவு!!
கட்சிக்குள் எதிரொலிக்கும் தாக்கம்:
துரையூர் சட்டமன்ற உறுப்பினரைப் பொறுத்தவரையில், அவர் திருச்சி புறநகர் மாவட்டத்தின் மாவட்ட செயலாளராகவும், துணை சபாநாயகராகவும் இருக்கின்றார். இந்தச் சூழலில், சர்ச்சையில் சிக்கிய அந்த இரண்டு பேர் மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தமிழக வெற்றிக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் நற்பெயரைக் காப்பதற்காகத் தன் சொந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதே முதல்வர் ஜோசப் விஜய் நேரடியாகத் தலையிட்டுத் தண்டிக்கும் நோக்கில் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், சர்ச்சைக்குரிய எம்எல்ஏக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது மட்டுமே மக்கள் மத்தியில் கட்சி மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை சரிசெய்யும் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.