கணவன் – மனைவி தகராறு.. குறுக்கே வந்த மாமியார்.. போட்டுத் தள்ளிய மருமகன்.. கொலையில் முடிந்த வாக்குவாதம்!
Dindigul Crime: திண்டுக்கல் மாவட்டத்தில் மனைவி, குழந்தைகள் குடும்பம் நடத்த அனுப்பி வைக்காத ஆத்திரத்தில் மாமியாரை கத்தியால் குத்தி மருமகன் கொலை செய்தார். இந்தச் சம்பவத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள நெய்க்காரன் பட்டியை சேர்ந்தவர் அஜ்மத் உசேன் (41 வயது). கூலித் தொழிலாயான இவருக்கும், தஸ்லீமா பேகம் ( 35 வயது) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், தம்பதியிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக தஸ்லீமா பேகம், தனது கணவரை பிரிந்து இரு மகன்களுடன் அமராவதியில் உள்ள தனது தாய் ஆசியம்மாள் வீட்டில் மகன்களுடன் வசித்து வருகிறார். மேலும், கணவர் அஜ்மத் உசேனை விவாகரத்து செய்யும் முயற்சிகளில் தஸ்லீமா ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அஜ்மத் உசேனுக்கு தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த அஜ்மத் தனது மனைவியை குடும்பம் நடத்து வருமாறு கூறினார். மேலும், மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ விருப்பம் இருப்பதாக தெரிவித்தார்.
மாமியார் – மருமகன் இடைய கடும் வாக்குவாதம்
ஆனால், தஸ்லீமாவின் தாய் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமராவதியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு அஜ்மத் உசேன் சென்றார். அங்கு, அவரது மனைவியை தஸ்லீமா மற்றும் அவரது மகன்கள் இல்லை. மாமியார் ஆசியம்மாள் மட்டுமே வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, தனது மனைவி மற்றும் மகன்களை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அவரிடம் கூறினார். ஆனால், இதற்கு அவசியம்மாள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. இதில், மாமியார் ஆசியம்மாளுக்கும், மருமகன் அஜ்மத் உசேனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
மேலும் படிக்க: பெரம்பூர் – திருச்சி கிழக்கு தொகுதி.. EVM- இல் விஜய்யின் பெயர்- சின்னம் எங்கே இருக்கும் தெரியுமா?




மாமியாரை கத்தியால் குத்திய மருமகன்
இதில், ஆத்திரம் அடைந்த அஜ்மத் உசேன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் ஆசியம்மாளை சரமாரியாக குத்தினார். இதில், பலத்த காயமடைந்த ஆசியம்மாள் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதற்குள், அஜ்மத் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் மயங்கி கிடந்த ஆசியம்மாளை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சில நிமிடங்களிலேயே ஆசியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
தலைமறைவான மருமகன் கைது
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமராவதி போலீசார் மருத்துவமனைக்கு சென்று ஆசியம்மாளின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஆசியம்மாள் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து குதிரையாரு சோதனை சாவடி அருகே பதுங்கி இருந்த அஜ்மத் உசேனை கைது செய்தனர். தனது மனைவி மற்றும் மகன்களை தன்னுடன் அனுப்பி வைப்பதற்கு தடையாக இருந்த மாமியாரை கொலை செய்ததாக அஜ்மத் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க: “தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ், பாஜகவால் தொடக்கூட முடியாது”.. ராகுல் காந்தி கர்ஜனை!!