போலீஸ் தாக்கியதில் ஆகாஷ் உயிரிழப்பு – சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் – 6 காவலர்கள் மீது வழக்குப்பதிவு
Sivagangai Aakash Death Case : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல்துறையின் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஆகாஷ் டெலிஷன் உயிரிழந்த விவகாரத்தில், அவர் காவல்துறையின் தாக்குதலால் உயிரிழந்ததாக சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அவரது குடும்பத்திரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை, ஆகஸ்ட் 26 : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல்துறையின் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஆகாஷ் டெலிஷன் உயிரிழந்த விவகாரத்தில், அவர் காவல்துறையின் தாக்குதலால் உயிரிழந்ததாக சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் வெளியாகியுள்ளது. மானாமதுரை அருகே கடந்த மார்ச் 5, 2026 அன்று கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த ஆகாஷ் டெலிஷன் தகராறு காரணமாக காவல்துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் கடந்த மார்ச் 8, 2026 அன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
‘போலீஸ் தாக்கியதில் ஆகாஷ் உயிரிழப்பு’
இந்த நிலையில் அவரது ஆகாஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலைில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதையும் படிக்க : 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு.. கர்நாடக சிஐடி விசாரணைக்கு மாற்றம்.. சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!!




இந்த நிலையில் சிபிசிஐடியின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 68 நாட்களுக்குப் பிறகு அதன் நகல் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதில், ஆகாஷ் டெலிஷனை மானாமதுரை அருகே யூகலிப்டஸ் மரங்கள் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று இரும்பு கம்பியால் தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அவரது வலது காலில் முழங்காலுக்கு கீழ் பகுதியும் மற்றும் கணுக்காலுக்கு மேல்பகுதியில் தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளது. இந்த காயங்களால் அவருக்கு ஏற்பட்ட இரத்த குழாய் அடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தென்காசியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்.. வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தீவிரம்..
ஆனால் காவல்துறையினரிடம் இருந்து தப்பி செல்லும் போது கீழே விழுந்து காயமடைந்ததாக போலீஸ் தரப்பில் தகவல் பதிவு செய்யப்பட்டதாகவும் அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவலர்கள் திலீபன், குகன், மகேந்திரன், காளீஸ்வரன், பழனியப்பன், தெய்வேந்திரன் ஆகிய 6 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.