பரந்தூர் விமான நிலையம் அமைந்திருந்தால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் – அமைச்சர் கீர்த்தனா..
சுமார் 1,500 நீர்நிலைகள் மற்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ளாமல் பரந்தூரை விமான நிலையத்திற்கான இடமாகத் தேர்வு செய்தது தவறு. மக்கள் பாதிக்காத வகையில் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைக்கப்படும்” என அமைச்சர் கீர்த்தனா சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 25, 2026: பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது. பரந்தூரில் மேற்கொள்ளப்பட்டு வந்த விமான நிலையப் பணிகள் கைவிடப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தெரிவித்தன.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக விரிவான விவாதம் நடைபெற்றது. அப்போது, பரந்தூர் விமான நிலையத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருந்திருக்கும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்வி:
விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்யப் போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடரும் மிதமான மழை..
இதற்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்கையில், “விமான நிலையத்திற்காக கடந்த 5 ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுக்கு சொந்தமானவை. உள்ளூர் வாசிகளின் நிலங்கள் எதையும் தமிழக அரசு இதுவரை கையகப்படுத்தவில்லை. சொந்த மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது” என தெரிவித்தார்.
பரந்தூர் விமான நிலையம் – சென்னையில் வெள்ளப்பெருக்கு அபாயம்:
தொடர்ந்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத தொழில்கள் தொடங்கப்படும் என்றும், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் மாற்றுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
“மழை இல்லாத காலத்திலும் விவசாயம் நடைபெறக்கூடிய விளைநிலங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால்தான் பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. பரந்தூரை விமான நிலையமாக மாற்றியிருந்தால் சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் இருந்திருக்கும். பரந்தூர் கால்வாய் அழிக்கப்பட்டிருந்தால் கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தைப் போன்ற நிலை சென்னையிலும் ஏற்பட்டிருக்கக்கூடும்.
மேலும் படிக்க: பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதற்கு நன்றி: முதலமைச்சர் விஜயை சந்தித்த விவசாயிகள்
சுமார் 1,500 நீர்நிலைகள் மற்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ளாமல் பரந்தூரை விமான நிலையத்திற்கான இடமாகத் தேர்வு செய்தது தவறு. மக்கள் பாதிக்காத வகையில் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைக்கப்படும்” என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை இதுவரை வெளியிடப்படாதது ஏன் என்றும் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது.