பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதற்கு நன்றி: முதலமைச்சர் விஜயை சந்தித்த விவசாயிகள்
90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது தவறான தகவல். அன்றைய தினத்தில் விஜய் அவர்கள் பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்தித்து அளித்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளார். முதலமைச்சருக்கு விவசாயிகள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என பரந்தூர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 25, 2026: பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, பரந்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப்ரமணியன், கதிரேசன் உள்ளிட்டோர் மற்றும் உள்ளூர் விவசாயிகள் முதலமைச்சரை சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் – முதல்வர் விஜய் அறிவிப்பு:
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பரந்தூர் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.
மேலும் படிக்க: விளையாட்டு வினையானது.. தொண்டையில் பலூன் சிக்கி 6 வயது சிறுவன் பரிதாப பலி.. திருப்பத்தூரில் சோகம்!!
அதேவேளையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் இந்த முடிவுக்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் சென்னைக்கு தொழில் முதலீடுகள் வருவதில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும், அரசியல் நோக்கத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த பரந்தூர் பகுதி விவசாயிகள்:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.8.2026) தலைமைச் செயலகத்தில், பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த திரு.ஜி.சுப்பிரமணியன், திரு.எஸ்.டி. கதிரேசன் மற்றும் உள்ளுர் விவசாயப் பெருமக்கள் சந்தித்து, பரந்தூரில்… pic.twitter.com/vFjl4oF4bp
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 25, 2026
இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, பரந்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுத் தலைவர் ஜி. சுப்ரமணியன், “பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க ஏற்ற சூழ்நிலை இல்லை. இதுகுறித்து பல்வேறு ஆதாரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தோம்.
இதற்காக இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. அப்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேச முயற்சி செய்தோம். ஆனால் அது நடைபெறவில்லை” என்றார்.
மேலும் படிக்க: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடரும் மிதமான மழை..
முதல்வர் விஜய் சொன்னதை செய்துள்ளார்:
மேலும், “90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது தவறான தகவல். அன்றைய தினத்தில் விஜய் அவர்கள் பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்தித்து அளித்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளார். முதலமைச்சருக்கு விவசாயிகள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்தார்.
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், “திமுகவைச் சேர்ந்த சிலர் அந்தப் பகுதியில் முதலீடு செய்திருந்தனர். திட்டம் செயல்படுத்தப்பட்டால் பலன் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் திட்டம் கைவிடப்பட்டதால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். திமுகவைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த முடிவை வரவேற்றுள்ளன” என ஜி. சுப்ரமணியன் தெரிவித்தார்.