இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் புதிய புரட்சி: UPI-யின் 10 ஆண்டு பயணம்
யு.பி.ஐ தற்போது பூடான், நேபாளம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், இலங்கை, மொரீஷியஸ், கத்தார், கம்போடியா, கிரீஸ் மற்றும் மாலத்தீவுகள் என 11 வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. சர்வதேச அளவில் நிகழும் உடனடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் 2024ஆம் ஆண்டில் யு.பி.ஐ சுமார் 49 சதவீத பங்கை பெற்றிருந்ததாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 25, 2026: இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பு கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் எளிமையான, பாதுகாப்பான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதியை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யு.பி.ஐ), தற்போது இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் முக்கிய தூணாக மாறியுள்ளது.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகமான (NPCI) உருவாக்கிய யு.பி.ஐ மூலம், ஒரே மொபைல் செயலி வாயிலாக பல்வேறு வங்கிக் கணக்குகளை இணைத்து பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது. 24 மணி நேரமும் உடனடி பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியுடன், இரு அடுக்கு அங்கீகாரம் மற்றும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
யு.பி.ஐயின் 10 ஆண்டுகால பயணம்:
2016ஆம் ஆண்டு 21 வங்கிகளுடன் சோதனை அடிப்படையில் யு.பி.ஐ அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. டிசம்பரில் BHIM செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டு டைனமிக் QR வசதி அறிமுகமானது.
2018ஆம் ஆண்டு UPI 2.0 அறிமுகப்படுத்தப்பட்டதுடன், இன்வாய்ஸ், யு.பி.ஐ மாண்டேட் ஓவர்டிராஃப்ட் கணக்கு இணைப்பு உள்ளிட்ட புதிய வசதிகள் சேர்க்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு யு.பி.ஐமாதாந்திர பரிவர்த்தனைகள் ஒரு பில்லியனைத் தாண்டின.
2020 முதல் 2022ஆம் ஆண்டு வரை யு.பி.ஐ ஆட்டோபே, யு.பி.ஐ 123பே, யு.பி.ஐ லைட் மற்றும் கிரெடிட் கார்டு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2022 மார்ச் மாதத்தில் மாதாந்திர பரிவர்த்தனைகள் 500 கோடியைத் தாண்டின.
2023ஆம் ஆண்டு கிரெடிட் லைன் ஆன் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டது. 2024ஆம் ஆண்டு யு.பி.ஐ சர்கிள், வரி செலுத்துதலுக்கான பரிவர்த்தனை வரம்பு உயர்வு உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. 2025ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் கைரேகை அல்லது முக அடையாளம் மூலம் யு.பி.ஐ பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியும் அறிமுகமானது.
இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறிய UPI
2026 ஜூலை நிலவரப்படி, யு.பி.ஐ அமைப்பில் 741 வங்கிகள் இணைந்துள்ளன. ஒரே மாதத்தில் 2,365.8 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 29.87 லட்சம் கோடி ஆகும்.
மேலும், யு.பி.ஐ தற்போது பூடான், நேபாளம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், இலங்கை, மொரீஷியஸ், கத்தார், கம்போடியா, கிரீஸ் மற்றும் மாலத்தீவுகள் என 11 வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. சர்வதேச அளவில் நிகழும் உடனடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் 2024ஆம் ஆண்டில் யு.பி.ஐ சுமார் 49 சதவீத பங்கை பெற்றிருந்ததாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
இதன் மூலம், இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் யு.பி.ஐ மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் முக்கிய அங்கமாகவும் உருவெடுத்துள்ளது.