Lunar Eclipse: ஆகஸ்ட் 28ஆம் தேதி வானில் தோன்றும் ரத்த நிலவு.. இந்தியாவில் இதை பார்க்க முடியுமா?
Blood Moon: ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6.53 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கும். காலை 9.43 மணிக்கு கிரகணம் உச்சத்தை அடையும். மதியம் 12.32 மணிக்கு கிரகணம் முழுமையாக நிறைவடையும். கிரகணத்தின் உச்சத்தில் நிலவின் சுமார் 96 சதவீத பகுதி பூமியின் நிழலுக்குள் செல்லும். இதனால் நிலவின் மிகப்பெரிய பகுதி இருண்டு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.
ஆகஸ்ட் 24, 2026: வானியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சந்திர கிரகணம் ஆகஸ்ட் 28, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்த கிரகணத்தின் உச்சக்கட்டத்தில் நிலவின் மேற்பரப்பில் சுமார் 96 சதவீதம் பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்படும். இதனால் நிலவு அடர் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கும். இதனை ‘ரத்த நிலவு’ (Blood Moon) என்றும் அழைக்கின்றனர்.
வானில் தோன்றும் ரத்த நிலவு:
சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஏறத்தாழ ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். குறிப்பாக, பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுகிறது. இந்த நிகழ்வு முழு நிலவு நாளில் மட்டுமே ஏற்பட முடியும்.
கிரகணத்தின்போது சூரிய ஒளி நேரடியாக சந்திரனை சென்றடையாமல் பூமியால் தடுக்கப்படுகிறது. ஆனால் பூமியின் வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும் சூரிய ஒளியின் ஒரு பகுதி வளைந்து சந்திரனை அடைகிறது. இதில் நீல நிற ஒளி அதிகமாகச் சிதறுவதால், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற ஒளி சந்திரனை அடைகிறது. இதன் காரணமாக சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது. இதுவே ‘ரத்த நிலவு’ என அழைக்கப்படுவதற்கான காரணமாகும்.
கிரகணம் எப்போது நடைபெறும்?
ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6.53 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கும். காலை 9.43 மணிக்கு கிரகணம் உச்சத்தை அடையும். மதியம் 12.32 மணிக்கு கிரகணம் முழுமையாக நிறைவடையும். கிரகணத்தின் உச்சத்தில் நிலவின் சுமார் 96 சதவீத பகுதி பூமியின் நிழலுக்குள் செல்லும். இதனால் நிலவின் மிகப்பெரிய பகுதி இருண்டு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.
மேலும் படிக்க: கண்கொள்ளாக்காட்சி.. மலைகளின் பள்ளத்தாக்குகள் வழியாக வந்தே பாரத்.. என்ன ரூட் இது?
எந்தெந்த நாடுகளில் பார்க்கலாம்?
இந்த சந்திர கிரகணம் வடக்கு மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் முழுமையாகக் காணப்படும். உலக மக்கள்தொகையில் சுமார் 44 சதவீதம் பேர் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த கிரகணத்தைப் பார்க்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் பகுதி கிரகணமாகக் காணப்படும். கிரகணம் நடைபெறும் நேரத்தைப் பொறுத்து ஒவ்வொரு பகுதியிலும் அதன் காட்சி நேரம் மாறுபடும்.
இந்தியாவில் பார்க்க முடியுமா?
இந்தியாவில் இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியாது. கிரகணம் நடைபெறும் முழு நேரமும் இந்தியாவில் பகல் நேரமாக இருப்பதே இதற்குக் காரணம். இதேபோல் ஆஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசிபிக் ரிம் எனப்படும் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும் இந்த நிகழ்வை நேரடியாகக் காண முடியாது.
மேலும் படிக்க: டிஜே இசையின் அதிர்வால் கடையில் இருந்த பொருட்கள் விழுந்த வைரல் வீடியோ.. இணையத்தில் ஏற்பட்ட விவாதம்..
சந்திர கிரகணங்கள் இயற்கையாக நிகழும் வானியல் நிகழ்வுகளாகும். அறிவியல் ரீதியாக, இதைக் காண்பதால் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே, கிரகணத்தை நேரடியாகக் காணும் வாய்ப்பு உள்ள பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் இந்த அரிய வானியல் நிகழ்வை ரசிக்கலாம்.